Type Here to Get Search Results !

ssss

Tel: 0039 123 45 789 | Email: info@Sooriyantv.Ca

--------------------------------------------------------- -------------------------------------------------

ராஜினாமா செய்தார் நாராயணசாமி: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார் புதுவை முதல்வர் நாராயணசாமி.


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்குக் கூடியது. முன்னதாக சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் அரசு நிறைவேற்றிய திட்டங்களைப் பட்டியலிட்டார். தற்போது நடப்பது எதிர்க்கட்சிகளின் ஆட்சிக் கவிழ்ப்பு வேலை என்ற அவர், புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்காக இரவு, பகலாக பாடுபட்டோம், மக்களால் புறக்கணிப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கின்றனர் எனக் குற்றம்சாட்டினார்.

எதற்கெடுத்தால் சிபிஐ, அமலாக்கத் துறையை ஏவுகிறது மத்திய அரசு, ஒரே நாடு, ஒரே வரியின் கீழ் பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றது, மத்திய அரசால் புதுச்சேரிக்கு 20 சதவிகித நிதி மட்டுமே வழங்கப்படுகிறது, பக்கத்து மாநிலங்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் போது புதுச்சேரிக்கு மட்டும் தடை ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

பேசிமுடித்த பிறகு நம்பிக்கை வாக்கு கோராமல் அவையிலிருந்து முதல்வர் நாராயணசாமி வெளியேறினார். அவருடன் சேர்ந்து காங்கிரஸ் அமைச்சர்களும் வெளிநடப்பு செய்தனர். இறுதியாக நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்ததாகக் கூறிய சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு பெரும்பான்மையை இழந்ததாக அறிவித்தார். இதனால் புதுச்சேரி காங்கிரஸ் அரசாங்கம் கவிழ்ந்தது.

தொடர்ந்து, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்த நாராயணசாமி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை அளித்தார். பின்னர் நாராயணசாமி காரில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ராஜினாமா கடிதத்தை அளித்து அதனை ஏற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளேன் என்றார்.

twitter
facebook sharing button
whatsapp sharing button

சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big