கனடாவில் பெண் ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தனது மகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபர்!
பிராம்டனில் பெண் ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, தனது ஒரு வயது மகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை பீல் பிராந்திய பொலிஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தையடுத்து அம்பர் எச்சரிக்கை(Amber Alert) விடுக்கப்பட்டது.
![]() |
(நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு சந்தேக நபர் கொல்லப்பட்டார், அவர் பிராம்ப்டனில் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றுவிட்டு, ஒரு வயது குழந்தையுடன் பின் இருக்கையில் காரில் தப்பிச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர்.) An officer-involved shooting in Niagara Falls has led to the death of a suspect who police say fatally shot a woman in Brampton and fled in a car with a one-year-old child in the back seat.) |
குயீன் வீதி கிழக்கு மற்றும் எயார்போர்ட் வீதிக்கு அருகிலுள்ள ஒரு வணிக வளாகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணுக்கு முதலுதவி அளித்த போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.
சந்தேகநபர், 38 வயதான அந்தோனி டெஷெப்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது குழந்தையுடன் கறுப்பு நிற 2024 நிசான் கிக்ஸ் ரக காரில் தப்பிச் சென்றுள்ளார். அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு, குழந்தை பாதுகாப்பாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் மீட்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயினும், சந்தேகநபர் அந்தோனி டெஷெப்பர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் ஐந்து அடி ஒன்பது அங்குல உயரம், மெலிந்த உடல், கபில நிறக் கண்கள் மற்றும் குட்டையான கபில நிற முடி கொண்டவர் என விவரிக்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக நீல நிற ஹூடி மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
சந்தேகநபரின் வாகனம் கடைசியாக நயாகரா-ஃபோர்ட் ஈரி பகுதியில் காணப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதால், அப்பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர். இது ஒரு நெருங்கிய உறவினர் தொடர்பான தனிப்பட்ட சம்பவம் என புலனாய்வாளர்கள் நம்புகின்றனர். சந்தேகநபர் மீது 2023 ஆம் ஆண்டில் துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டுகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Latest Updated:
பிராம்ப்டனில் பெண் ஒருவரைக் கொலை செய்த சந்தேகநபர், நயாகரா நீர்வீழ்ச்சியில் பொலிஸாருடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில், 38 வயதான அந்தோனி டெஷெப்பர் என்பவரே கொல்லப்பட்டதாக நயாகரா பிராந்திய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை(22) பிற்பகல் 2 மணியளவில், பிராம்ப்டனில் உள்ள குயீன் வீதி கிழக்கு மற்றும் எயார்போர்ட் வீதிக்கு அருகிலுள்ள ஒரு வர்த்தக வளாகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பீல் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையைத் தொடர்ந்து, சந்தேகநபர் கியூபெக் இலக்கத் தகடு கொண்ட கறுப்பு நிற 2024 நிசான் கிக்ஸ் ரக வாகனத்தில் ஒரு வயதுக் குழந்தையுடன் தப்பிச் சென்றார். இதனையடுத்து, குழந்தையைக் கண்டுபிடிப்பதற்காக ‘அம்பர் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், குழந்தை குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். இந்த கொலை தனிப்பட்ட உறவுமுறை தொடர்பான சம்பவம் என புலனாய்வாளர்கள் விபரித்துள்ளனர்.
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 2:30 மணியளவில், நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள தோரோல்ட் ஸ்டோன் வீதி மற்றும் மொன்ரோஸ் வீதிக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் சந்தேகநபரின் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பொலிஸார் சம்பந்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஒன்ராறியோவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
0 Comments