எளிமையின் சிகரம், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஐயா நல்ல கண்ணு அவர்கள் காலமானார்!
💐😢
#AyyaNallaKannu #ஐயாநல்லகண்ணு #Thozhar
நான் படகில் ஏற மாட்டேன்.. சென்னை வெள்ளத்தில்.. படகில் ஏற மறுத்த நல்லகண்ணு.. ஏன் தெரியுமா??..
******************************************************************
![]() |
| (Picture By : Sathiyam TV News) |
2015-ம் ஆண்டு சென்னை டிசம்பர் மழையில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் நெகிழ வைத்த ஒரு சம்பவம் சி.ஐ.டி நகரில் அரங்கேறியது. அது, நல்லகண்ணு என்கிற ஒரு மனிதர், எப்படி 'தலைவன்' என்கிற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார் என்பதற்கான சாட்சி!
"என்னை விட அவசரமானவர்கள் அங்கே இருக்கிறார்கள்!"
அன்று சென்னை மாநகரமே ஒரு குட்டித் தீவாக மாறியிருந்தது. நந்தனம் சி.ஐ.டி நகரில் இருந்த நல்லகண்ணு வீட்டைச் சுற்றி மார்பளவுத் தண்ணீர். 90 வயதைக் கடந்த ஒரு முதியவர் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார் என்ற செய்தி கேட்டு, மீட்புக்குழுவினர் ஒரு ரப்பர் படகோடு நல்லகண்ணுவின் வீட்டிற்கு விரைந்தார்கள்.
படகு ஜன்னல் அருகே வந்ததும், "அய்யா... சீக்கிரம் ஏறுங்கள், உங்களைத்தான் முதலில் மீட்கச் சொல்லி உத்தரவு" என்றார்கள் மீட்புப் பணியாளர்கள். ஆனால், அந்த நரைத்த மனிதரிடமிருந்து வந்த பதில் அவர்களை உறைந்து போகச் செய்தது.
"தம்பி... நான் இங்கே பாதுகாப்பாகத்தான் இருக்கிறேன். அங்கே பக்கத்து தெருவில் கைக்குழந்தையோடு ஒரு பெண் ஒருவர் இருக்கிறார். இன்னொரு வீட்டில் வயதான நோயாளி ஒருவர் இருக்கிறார். முதலில் அவர்களைக் காப்பாற்றுங்கள். இந்த ஏரியாவில் இருக்கும் கடைசி ஆளாக நான் வருகிறேன்!" - இதுதான் அய்யா சொன்ன வார்த்தை.
அதையும் மீறி அதிகாரிகள் அவரை ஏற சொன்ன போது.. நல்லகண்ணு சொன்ன வார்த்தைகள்.. இந்த ஏரியாவில் உள்ள எல்லோரும் ஏறட்டும்.. பின்னர் நான் ஏறுகிறேன் என்பதுதான்!

**************************************************************
இன்றைய காலத்தில் ஒரு சிறிய உதவி செய்தாலே கேமராவை முன்னால் நிறுத்தும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், நல்லகண்ணு இதைப் பெரிய விஷயமாகவே கருதவில்லை. "எல்லோரும் என் பிள்ளைகள், அவர்களை விட எனக்கு என்ன முக்கியத்துவம் வேண்டியிருக்கிறது?" என்று சாதாரணமாகக் கடந்து போனார்.
மீட்கப்பட்ட பிறகு, அரசு விருந்தினர் மாளிகைக்கோ அல்லது நட்சத்திர விடுதிக்கோ செல்லாமல், ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் சிறிய அலுவலகத்தில் தரையில் படுத்து உறங்கிய அந்த எளிமைதான் அய்யா நல்லகண்ணு!
அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்ல கண்ணு அவர்கள் இன்று தனது 101வது வயதில் சென்னையில் காலமானார். 80 ஆண்டு கால அரசியல் போராட்ட வரலாறு கொண்ட தோழர் நல்லகண்ணு கடைசிவரை மீசை வைத்துக் கொள்ளவில்லை. அந்த மீசைக்கு பின்னால் மனதை உலுக்க வைக்கும் ஒரு பின்னணி உள்ளது பலருக்கும் தெரியாது.
சுதந்திரப் போராட்ட போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தோழர் நல்லகண்ணு. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925 இல் பிறந்த இவர் மாணவப் பருவத்தில் இருந்தே சுதந்திர தாகம் கொண்டவர்.
18 வயதிலேயே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர். தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் குரல் கொடுத்தவர். 1949 இல் நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றவர்.
1949 முதல் நெல்லை பாளையங்கோட்டை, வேலூர் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டவர். கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கத்திற்கு பிறகு அவர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் விடுதலையானார். தொடர்ந்து அரசியல் வாதியாக மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் குரல் கொடுத்தவர். தமிழக முழுவதும் அவர் கால்படாத இடங்களை இல்லை என சொல்லலாம். அந்த அளவுக்கு அவரது கால்கள் தமிழகம் முழுவதும் பயணப்பட்டது.
இந்நிலையில் இன்று(25) நண்பகல் 1.55 மணிக்கு நல்லகண்ணு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் தங்கள் கண்ணீர் அஞ்சலியை நல்ல கண்ணுவுக்கு செலுத்தி வருகின்றனர்.
ஐயா நல்லகண்ணுவின் (101) உடல் அவரது விருப்பப்படி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்படுகிறது. வயது மூப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 1 ஆம் தேதி முதல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நல்லகண்ணு.
மீசையில்லாத நல்லக்கண்ணுவைத்தான் நாம் அதிகம் பார்த்திருப்போம்.
#############################################################################
அதற்கு பின்னர் ஒரு கொடூர மனதை உருக்கும் பின்னணி உள்ளது. நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது மிகப் பெரிய மீசை வைத்திருந்தாராம். அப்போது காவல் அதிகாரிகள் அவரது கூட்டாளிகள் குறித்து விசாரித்து ஒவ்வொரு மீசை முடியையும் கையாலேயே பிடிங்கி எடுத்துள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்கும் வரை தான் மீசை வளர்க்கப்போவதில்லை என்று முடிவெடுத்த நல்ல கண்ணு கடைசிவரை மீசை வளர்க்கவில்லை என்பது தான் மனதை உருக்கும் சோகம்.


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.