நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று கொழும்பில் இன்று (16) நடத்தப்பட்டது.
பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த எதிர்ப்பு போராட்டம் இன்று பிற்பகல் நடத்தப்பட்டது.
Source: News 1st Tamil.
''சாபக்கேடான அரசாங்கத்திற்கு எதிரான பேரணி'' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உரத் தட்டுப்பாடு, சீமெந்து தட்டுப்பாடு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, விவசாயிகளின் பிரச்சினைகள் என நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தி பாரிய போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.
சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டலுக்கு அமைய, மக்கள் ஒன்று கூட்டுவது தடை செய்யப்பட்டது என அரசாங்கம் கூறிய நிலையில், போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்தது.
வைரஸ் பரவுகின்றமையினால், இவ்வாறான பேரணிகளை நடத்த இடமளிக்க முடியாது எனவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்படும் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில், நீதிமன்றங்களை போலீஸார் நேற்றைய தினம் நாடியிருந்தனர்.
மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையிலான தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு போலீஸார், நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், சில நீதிமன்றங்கள் போராட்டத்திற்கு தடை விதித்த போதிலும், மேலும் சில நீதிமன்றங்கள் போராட்டத்தை நடத்துவதற்கு தடை விதிக்க மறுத்திருந்தன.
இவ்வாறான பின்னணியில், போலீஸ் மாஅதிபரினால் நேற்றைய தினம் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவித்தல் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கொழும்பிற்கு மக்கள் ஒன்று கூட வருகைத் தருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீஸ் மாஅதிபர், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அறிவித்தல் பிறப்பித்திருந்தார்.
இவ்வாறான நிலையில், ஏனைய பகுதிகளிலிருந்து கொழும்பிற்குள் வருகைத் தந்த வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், போராட்டத்திற்கு கொழும்பை நோக்கி பயணித்தவர்கள் எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த காவலரண்களுக்கு அருகில் சில அமைதியின்மை சம்பங்களும் பதிவாகியிருந்தன.
போராட்டத்திற்கு பங்குக்கொள்வதற்கு வருகைத் தந்த மக்கள் போலீஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் அந்தந்த இடங்களிலேயே அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில், கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் 2 மணி அளவில் போராட்ட பேரணி ஆரம்பமானது.
எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமான பேரணி, கொள்ளுபிட்டி ஊடாக, காலி முகத்திடலை நோக்கி பயணித்திருந்தது.
அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு, ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த பேரணியை நடத்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் பின்னர், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் மத்தியில் கருத்து வெளியிட்டார்.
அரிசி, சீனி, எரிபொருள், மண்ணெண்ணை, பால் மா ஆகியவற்றுக்கான வரிசைகள் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், மக்கள் இன்று வரிசையில் நிற்கும் யுகமொன்று ஆரம்பமாகியுள்ளதாகவும் எதிர்கட்சித் தவைலர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.
1969ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்தகரிப்பு நிலையமானது, வரலாற்றில் முதல் தடவையாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அரசாங்கத்திடம் கையிருப்பில் டொலர் இல்லாமையே, இதற்கான காரணம் என கூறப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.
எனினும், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தற்போது கூறி வருவதையும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
மசகு எண்ணெய் கொள்வனவிற்கு டொலர் இல்லை என கூறும் அரசாங்கத்திற்கு, சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கொண்டு வருவதற்கு மாத்திரம் பணம் இருக்கின்றதா என அவர் கேள்வி எழுப்புகின்றார்.
நேரடி கொள்வனவு முறையின் ஊடாக, மோசடிகளை செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.
இதேவேளை, சபுகஸ்கந்த எரிபொருள் சுத்தகரிப்பு நிலையத்தின் தொடர்பில் சில தரப்பினரால் வெளியிடப்படும் அனைத்து தகவல்களும் போலியானவை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
எரிபொருள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிடும் கருத்துக்கு அமைய மாத்திரமே, நாட்டு மக்கள் செயற்பட வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிடுகின்றார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாதாந்தம் மக்கள் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளதென கூறிய அவர், இதுவொரு மோசடியான செயற்பாடா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, சுகாதார வழிகாட்டி நடைமுறைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடு குறித்து எதிர்கட்சிக்கு அக்கறை இருக்குமானால், அரசாங்கத்துடன் இணைந்து வைரஸை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
எனினும், வைரஸை பரப்புவதற்கான நடவடிக்கைகளையே எதிர்கட்சி முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
Post a Comment
0 Comments