Type Here to Get Search Results !
--------------------------------------------------------------------------------------------

இங்கிலாந்தில் தற்கொலைக் குண்டு தாக்குதல் முறியடிப்பு! வெடித்துச் சிதறிய டக்ஸி!!

இங்கிலாந்தின் வடமேற்கே லிவர்பூல்நகரில் நேற்று வாடகை டக்ஸி(Taxi) ஒன்று வெடித்துச் சிதறி எரிந்தது. அந்தச் சம்பவம் ஒரு தற்கொலைக் குண்டு வெடிப்பு என்று பொலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Explosion at Liverpool Women's HospitalIMAGE SOURCE,CARL BESSANT
Image caption,
               (Pictures of a burning car outside the hospital have been widely shared on social media)

அதனையடுத்து நாடு முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல் விழிப்பு நிலை மிகத் தீவிரமான(Severe) கட்டத்துக்கு உயர்த்தப்பட்டிருப்பதாகப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்திருக்கிறார். 

இன்று(16) நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய அவர், இன்னமும் விழிப்புடன் இருக்கவேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் நினைவூட்டியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இன்று அவசர பாதுகாப்புக் கூட்டத்தில் (emergency Cobra meeting) கலந்துகொண்ட அதிகாரிகள், நாடு அடுத்து ஒரு தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருகின்ற பொப்பி மலர் தினமாகிய நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே வாடகை டக்ஸி ஒன்று திடீரென வெடித்துத் தீப்பற்றி எரிந்தது. அதிலிருந்த பயணி ஒருவர் உயிரிழந்தார். சாரதி வெளியே பாய்ந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்.

போரில் உயிரிழந்தவர்களுக்காக முற்பகல் 11 மணிக்கு நாடு முழுவதும் இரு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்தப்படவிருந்த சமயத்தில் ஓரிரு நிமிடம் முன்பாக இந்த வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றது. அது ஒரு தற்கொலைக் குண்டு தாக்குதல் முயற்சி என்பதை விசாரணையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடி குண்டுடன் டக்ஸியில் வந்த நபர் ஒருவரே குண்டை வெடிக்கச் செய்துள்ளார். அவர் குண்டை தனது உடலில் பொருத்தியிருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடொன்றைச் சேர்ந்த அந்த நபர் இங்கிலாந்தில் நீண்ட காலம் வசித்து வருபவர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வெடிகுண்டுடன் நபரைத் தனது டக்ஸியில் ஏற்றிவந்த சாரதி அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் வாகனத்தை விட்டு இறங்கவிடாது அவரை உள்ளே சிறிது நேரம் பூட்டி வைத்திருந்துள்ளார். அதன் காரணமாகவே அந்த நபர் குண்டை வெடிக்கச் செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சாரதி எரியும் காரில் இருந்து ஒருவாறு வெளியேறித் தப்பிவிட்டார்.

தாக்குதலாளியின் இலக்கு மகளிர் மருத்துவமனையா அல்லது சிறிது தூரத்தில் முன்னாள் படை வீரர்கள் பங்குபற்றிய நினைவு நிகழ்வு நடைபெற்ற தேவாலயமா என்பது தெரியவில்லை. மருத்துவமனைக்கு அருகிலேயே அவர் டக்ஸியில் இருந்து இறங்க முயன்றுள்ளார் என்று கூறப்படுகிறது. சாரதி கதவைப்பூட்டி அவர் இறங்குவதைத் தாமதப்படுத்தியிருக்கிறார்.

தாக்குதலாளி தனது இலக்கை நெருங்கி குண்டை வெடிக்கச் செய்திருந்தால் பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம். விழிப்பான சாரதியின் துணிச்சலான செயலினாலேயே அது தவிர்க்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. அதனால் சாரதிக்குப் பாராட்டுக்கள்குவிந்து வருகின்றன.

வீட்டில் குண்டைத் தயாரித்து டக்ஸியில் எடுத்துவந்தவரது நோக்கம் என்ன என்பது தெளிவாகவில்லை எனக் கூறியிருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள், இது ஒரு பயங்கரவாதப் பின்னணி கொண்ட தாக்குதல் முயற்சியா என்பதை அறிவதற்கு முயன்றுவருவதாகத் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலாளியின் வீட்டில் இருந்து வெடி பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை அவருடன் தொடர்புடைய வேறு நான்கு பேரைப் பொலீஸார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
Tags

Post a Comment

0 Comments

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big