அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

புதிய மாக்ஸிச லெனின் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி என்ன…?, இறந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி குறித்த போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘அரசே காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களுக்கு பதில் என்ன?, அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பே கிடையாதா, முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை எரிக்காதே, அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய், அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கு’ உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், புதிய மாக்ஸிச லெனின் கட்சியின் முக்கியஸ்தர்களான டொன்பொஸ்கோ, பிரதீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.