ஈழம் என்று இலங்கையை குறிப்பிட்டால் அது தவறில்லை என்று தெரிவித்திருக்கின்றார் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய. 

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று(17) செவ்வாய்க்கிழமை இரவு நடந்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். 

ஈழம் என்று சொன்னாலே அது நாட்டைப் பிரிக்கின்ற அல்லது பிரிவினைவாதத்திற்கு தூண்டுதல் செய்கின்ற சொல்லாக திரிவுபடுத்தப்பட்டுவிட்டது. அது முற்றிலும் பிழை என்றும் அவர் கூறினார். 

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “ஈழம் என்கிற சொல் மிகவும் தவறான சொல் கிடையாது. ஈழம் என்றால் என்ன? எமது தேசிய கீதமும் தமிழ் மொழியில் உள்ளது. அதிலும் ஈழம் என்கிற சொல் உள்ளடக்கப்பட்டுள்ளது.ஈழம் என்றால் இலங்கை என்று அர்த்தப்படுகின்றது. ஹெல என்கிற சிங்களச் சொல்தான் ஈழம் என்று பரிணாமப்படுகின்றது. ஈழம் என்கிற சொல் எந்த வகையிலும் பிழையில்லை. நான் ஈழத்திற்கு எதிர்ப்பானவன் அல்ல. மாறாக தமிழீழத்திற்குதான் எதிர்ப்பானவன். 

தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழத்திற்காக போராட்டத்தை நடத்தவில்லை. தமிழீழத்திற்காகவே போராட்டம் செய்தார்கள். மேலும் ஈழம் என்பது இனவாதச் சொல்லும் கிடையாது. நாட்டைப் பிரிக்கின்ற சொல்லும் கிடையாது. அந்த வார்த்தையை பயன்படுத்தினால் நாடு இரண்டாகவும் பிளவடையாது. 

சிங்களக் கட்சிகள்கூட இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையில் இருக்கின்றன. ஏன் முஸ்லிம் கட்சிகளுங்கூட உள்ளன. அந்த சேர்க்கைக்குள் ஈழம் என்பதை சேர்த்துவிடவேண்டாம். ஈழம் என்பது இனவாதம், பிரிவினைவாதம் என்று மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுவிட்டது. அது போலியானது. கலாநிதி அப்துல் கலாம் கூறியதுபோல முதலாவது இந்தியன், என்றுபோல முதலாவது இலங்கைப் பிரஜை. இரண்டாவதுதான் மதம். அம்மா என்பதற்கு தாய் என்று கூறுவதுபோலவே இலங்கை என்பதற்கு ஈழம் என்று கூறமுடியும்” என்றார்.