யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழி விவகாரம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். வெளிவிவகாரக் குழுவின் கூட்டத்தில் இந்தக் கேள்வியை எழுப்பிய உமா குமரன், தனது உரையின் ஆரம்பத்தில் தமிழ் மக்களுக்கான நீதி குறித்து கடந்த 2024 நவம்பர் மாதம் அமைச்சர் லமியிடம் கேள்வி எழுப்பியிருந்ததை நினைவுகூர்ந்தார்.
அமைச்சர் லமியின் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கும், கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாகத் தமிழ் சமூகத்திற்கு அவர் வெளிப்படுத்திய ஆதரவுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்ட உமா குமரன், தனது குடும்பத்தின் இலங்கை மோதல் குறித்த கதையை அமைச்சர் அறிவார் எனக் குறிப்பிட்டார். மார்ச் மாதம் இலங்கை மோதலின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகப் பிரித்தானியா தடைகளை அறிவித்தமை குறித்து அவர் திருப்தி தெரிவித்தார். சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை, தமிழ் சமூகத்திற்கு இந்தத் தருணத்தில் மிகவும் முக்கியமான விடயம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனினும், கவலையளிக்கும் விதமாக, கடந்த மாதம் இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மற்றுமொரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து அவர் கவலை தெரிவித்தார். அந்தப் புதைகுழியில் மூன்று குழந்தைகளின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழிகளை சர்வதேசத் தரத்தின் கீழ் அகழ்வு செய்வதற்கான போதிய வளங்கள் இலங்கையில் இல்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கரிசனை வெளியிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.இறுதியாக, பிரித்தானிய அரசாங்கம் இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா என்றும், மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளுக்குப் பிரித்தானியா ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா என்றும் உமா குமரன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமியிடம் கேள்வி எழுப்பினார்.
Social Plugin
Social Plugin