இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலத்தை முக்கிய ஆதாரமாக கருத முடியாதென மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஏற்கனவே குறித்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு முன் கருத்து வெளியிட்டுள்ள நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள வாக்குமூலத்தை இரகசிய அறிக்கையாக ஏற்றுக் கொள்ள முடியாதென கட்சியின் உறுப்பினரான சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
மைத்திரியின் வாக்குமூலம்
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காது பின்வாசல் வழியாக அவர் வெளியேறியிருந்தார். இந்த வாக்குமூலம் தொடர்பான விடயங்கள் நேற்றைய தினம் சட்ட மா திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து இன்று நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலம் தொடர்பில் உடனடி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவரது வாக்குமூலத்தை ஆதரமாக கொண்டு விசாரணைகளை முன்னெடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீதித்துறையின் முன் கூறப்பட வேண்டிய உண்மைகளை ஊடகத்தின் முன் கூறுவது சட்டவிரோதமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Social Plugin
Social Plugin