ஜெயலலிதா வீட்டிலேயே கொலை-கொள்ளை நடந்ததுதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப்பெரிய சாதனை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நீலகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்று இன்று  சிறப்புரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், முதல் ஐந்து ஆண்டு காலம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மக்களை மறந்தார் ஜெயலலிதா. அடுத்த ஐந்து ஆண்டு காலம் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள மக்களை மறந்தார் பழனிசாமி. அதனால்தான் பத்தாண்டு காலத்தில் தமிழகம் பெரும் பாதாளத்துக்குத் தள்ளப்பட்டது. இந்த பாதாளத்தில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கான போர்தான் வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்!

 dmk

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் உள்ள பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளைச் சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப் பெரிய சாதனை என்ன என்றால், ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளை நடந்தது, கொலையும் நடந்தது, மர்ம விபத்துக்கள் நடந்தது என்பதுதான்.

இதில் முதல்வர் பழனிசாமியின் பேரில் நேரடியாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன என்றால், அப்படி ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார் என்றால் அது தமிழ்நாட்டுக்கே அவமானம் இல்லையா? இந்த அவமானத்தைத் துடைக்க வேண்டாமா?

ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது அரசியல் ரீதியான விமர்சனங்கள் வரலாம். ஆனால் இது போன்ற குற்றப் புகார்கள் வருமானால் அது தமிழக வரலாற்றுக்கே ஏற்பட்ட மாபெரும் தலைக்குனிவு ஆகும். அதனால்தான் தமிழகத்தை மீட்க வேண்டும் என்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.