யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை விவகாரம் மற்றும் வடக்கு-கிழக்கில் தொடரும் பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (22) பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாகப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

(#Jaffna #JaffnaUniversity #Thaiyiddi, யாழ்ப்பாணம்,தையிட்டி,பல்கலைக்கழக மாணவர்,News,Jaffna, JaffnaUniversity, Thaiyiddi,)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டு தமது கண்டனங்களை வெளியிட்டனர்.

“எங்கள் காணிகளை அபகரிக்காதே”

"தையிட்டி எங்கள் சொத்து", "எங்கள் காணிகளை அபகரிக்காதே", "பௌத்த ஆக்கிரமிப்பை உடன் நிறுத்து" போன்ற கோஷங்களை எழுப்பிய மாணவர்கள், தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.


கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு:

நேற்றைய தினம் தையிட்டி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமைக்கு மாணவர்கள் தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். ஜனநாயக ரீதியில் போராடுபவர்கள் மீதான அடக்குமுறைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

தாயக ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு:

தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட முறையில் பௌத்த சின்னங்கள் அமைக்கப்படுவதையும், தமிழர் கலாசார அடையாளங்கள் அழிக்கப்படுவதையும் மாணவர்கள் சுட்டிக்காட்டினர். வடக்கு-கிழக்கில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் மற்றும் உரிய தரப்பினர் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் இப்போராட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை விடுத்தனர்.