கடந்த மாதம் பிப்ரவரியில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கூரை சோலார் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்தத் திட்டத்தின் படி இந்தியாவில் ஒரு கோடி வீடுகளில் சோலார் பேனல்களை அமைக்கும் முயற்சியை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. மாற்று சக்திகள் மூலம் மின்சாரம் தயாரித்து பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்தது.
வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பதற்காக பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் மேற்கூரை சோலார் திட்டத்தின்படி வீட்டின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை அமைத்து பயன்படுத்துவோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்தத் திட்டத்திற்கு ரூ.75,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
வீடுகளில் 2 கிலோவாட் வரையிலான சோலார் பேனல்களை அமைப்பவர்களுக்கு 1 கிலோ வாட்டிற்கு ரூ.30,000 என்று அளவிலும் 3 கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல்களை அமைப்பவர்களுக்கு 1 கிலோ வாட்டிற்கு ரூ.18,000 என்ற அளவிலும் மானியம் கிடைக்கும்.
அதுமட்டுமின்றி இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் வங்கிகளில் கடனும் பெற முடியும். எந்தவித பணயமும் வைக்காமல் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெறலாம் என மத்திய அரசின் செய்தி தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் எந்தெந்த வங்கிகளில் கடன் பெற முடியும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா: வீட்டின் மேற்கூரையில் 3 கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல்களை அமைப்பதற்கு கடன் கிடைக்கும். உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் சோலார் பேனல்களை நிறுவும் நிறுவனத்திடமே அதற்கான தொகையை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நேரடியாக செலுத்தி விடும். அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கடன் கிடைக்கும்.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா: 3 கிலோ வாட் வரையிலான மேற்கூரை சோலார் பேனல்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. ரூ.6 லட்சம் வரை கடன் வாங்கலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி: 10 கிலோ வாட் வரையிலான சோலார் பேனல்களை அமைப்பவர்களுக்கு ரூ.6 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகிறது. பேனல்கள் அமைக்கப்பட்டவுடன் அதை அமைத்த நிறுவனத்திற்கே நேரடியாக பணம் சென்று விடும்.
கனரா வங்கி: 3 கிலோ வாட் திறன் கொண்ட பேனல்களை அமைக்க ரூ.2 லட்சம் கடன் கிடைக்கும்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா : 3 கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல்களை நிறுவ ரூ.2 லட்சம் வரை கடன் கிடைக்கும்.
மேற்கூரை சோலார் திட்டம் மற்றும் வங்கிக்கடன் குறித்த தகவல்களை https://pmsuryaghar.gov.in/VendorList/financialAssistanceReport என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
Post a Comment
0 Comments