கார் டயர்களில் உள்ள V, W மற்றும் Y போன்ற ஆங்கில எழுத்துக்கள் எதை குறிக்கிறது? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
தொலை தூர பயணங்களின்போது உங்கள் காரை அதிவேகத்தில் ஓட்டி செல்ல விரும்புகிறீர்களா? ஆம் என்றால், உங்களின் கார் அதிகபட்சமாக எவ்வளவு வேகத்தில் பயணிக்கும் என்பதை நீங்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானது. கார்களை போலவே, டயருக்கும் என தனியாக டாப் ஸ்பீடு வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் பலருக்கும் தெரிவதில்லை.
உங்கள் வாகனத்துடைய டயரின் பக்கவாட்டில் பல்வேறு குறியீடுகள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவை அந்த டயரை பற்றிய விபரங்களை நமக்கு வழங்குகிறது. இந்த விஷயம் நம்மில் பலருக்கும் நிச்சயம் தெரியும். உதாரணத்திற்கு '195/55 R16 87V' என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது என வைத்து கொள்வோம். இதற்கான முழுமையான அர்த்தத்தை வாகன உரிமையாளர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
ஆனால் இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு, இந்த குறியீடுகள் டயரின் அகலம், உயரம், ரிம் டயாமீட்டர் மற்றும் எவ்வளவு எடையை தாங்கும்? ஆகியவற்றை குறிக்கின்றன என்பது தெரியும். எனினும் கடைசியில் உள்ள 'V' என்ற ஆங்கில எழுத்து எதை குறிக்கிறது? என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அதைதான் நாம் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
இது டயரின் அதிகபட்ச வேகம் ஆகும். இதனை 'டயர் ஸ்பீடு ரேட்டிங்' என்கின்றனர். 'V' மட்டுமல்லாது, 'W' 'Y' என ஸ்பீடு ரேட்டிங்கை குறிப்பதற்கு பல்வேறு குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் அதிகபட்ச வேகம் வரையறுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு இங்கே 'V' என்பது, இந்த டயரில் அதிகபட்சமாக மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம் என்பதை குறிக்கிறது.
பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர்தான், டயர் ஸ்பீடு ரேட்டிங் வரையறை செய்யப்படுகிறது. எனவே இதனை சரியாக பின்பற்றுவது சிறந்தது. ஆனால் டயர்கள் சேதம் அடையாமல் இருக்கும்போது மட்டும்தான் இந்த அதிகபட்ச வேகம் பொருந்தும். அதாவது 'V' குறியீடு கொண்ட டயர் சேதம் அடைந்துள்ளது என்றால், அதன் அதிபட்ச வேகமான மணிக்கு 240 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்க கூடாது.
அதேபோல் காரில் ஓவர்லோடு இருந்தாலும், அதிகபட்ச வேகம் பொருந்தாது என்பதை மனதில் கொள்ளுங்கள். இதுதவிர டயர் எப்போதாவது பஞ்சராகி, அது சரி செய்யப்பட்டிருந்தாலும் கூட, உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ள அதிகபட்ச வேகத்தில் பயணம் செய்ய கூடாது என்கின்றனர். டயர் ஸ்பீடு ரேட்டிங்கிற்கான குறியீடுகள் மற்றும் அவற்றின் அதிகபட்ச வேகத்தை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.
Tyre Speed Rating Table | Speed In KM/Hour |
A1 | 5 |
A2 | 10 |
A3 | 15 |
A4 | 20 |
A5 | 25 |
A6 | 30 |
A7 | 35 |
A8 | 40 |
B | 50 |
C | 60 |
D | 65 |
E | 70 |
F | 80 |
G | 90 |
J | 100 |
K | 110 |
L | 120 |
M | 130 |
N | 140 |
P | 150 |
Q | 160 |
R | 170 |
S | 180 |
T | 190 |
U | 200 |
H | 210 |
V | 240 |
W | 270 |
Y | 300 |
VR | >210 |
ZR | >240 |
உங்கள் காரின் டயர் தேய்ந்து விட்டது எனும் சூழலில், நீங்கள் புதிய டயர்களை வாங்க செல்கிறீர்கள் என்றால், உற்பத்தியாளர் தெரிவித்துள்ள வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக உங்கள் காரின் அதிகபட்ச வேகம் என்னவோ, அதைக்காட்டிலும் அதிக ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயர்களைதான் தேர்வு செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
தற்போது உங்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கலாம். அதற்கான விடைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம். அதாவது உற்பத்தி நிறுவனம் பரிந்துரைத்ததை விட அதிக ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயரை பயன்படுத்தலாமா? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். இந்த கேள்விக்கு நிச்சயமாக பயன்படுத்தலாம் என்பதுதான் பதில்.
அதிக ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயர்களுக்கு மாறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. ஏனெனில் நீங்கள் என்ன வேகத்தில் பயணம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளீர்களோ? அதைக்காட்டிலும் அதிக வேகத்தில் பயணம் செய்யக்கூடிய திறனை பெற்றுள்ள டயர்களை பயன்படுத்துவது என்பது மிகவும் பாதுகாப்பான ஒரு நடைமுறைதான்.
அதே சமயம் உற்பத்தி நிறுவனம் பரிந்துரைத்ததை விட குறைவான ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயரை பயன்படுத்தலாமா? என்ற சந்தேகமும் சிலருக்கு இருக்கும். இந்த கேள்விக்கு நிச்சயமாக இல்லை என்பதுதான் பதில். பரிந்துரைத்ததை விட குறைவான ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயரை பயன்படுத்துவது ஆபத்தானது என்பதுடன், சட்டத்திற்கு புறம்பானது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.
நீங்கள் இப்படி தவறான டயர்களை பயன்படுத்தினால், காப்பீடு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெவ்வேறு ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயர்களை கார்களில் பயன்படுத்தலாமா? என்ற சந்தேகமும் சிலருக்கு இருக்கும். சிறப்பான செயல்திறன் கிடைக்க வேண்டுமென்றால், ஒரே ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயர்களைதான் 4 சக்கரங்களிலும் பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
(குறிப்பு: இங்கே காணப்படும் டயர்களில் உள்ள நிறுனவனங்களின் பெயர்களை ஏதும் நாம் விளம்பரப் படுத்தவில்லை.)
Source By: Drivespark.
Post a Comment
0 Comments