Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

மத்திய பட்ஜெட் தாக்கல் - தமிழகத்துக்குப் பெருத்த ஏமாற்றம்: முதல்வர் ஸ்டாலின்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டவை,

எரிபொருள் கலப்பை ஊக்குவிக்க, கலக்காத எரிபொருளுக்கு 2022 அக்டோபர் 1 முதல் லிட்டருக்கு ரூ.2 வீதம் கூடுதல் வித்தியாச கலால் வரி விதிக்கப்படும்.

ஏற்றுமதியை ஊக்குவிக்க அலங்காரம், டிரிம்மிங், பாஸ்ட்னர்கள், பொத்தான்கள், ரிவிட், லைனிங் மெட்டீரியல், குறிப்பிட்ட தோல், மரச்சாமான்கள் பொருத்துதல்கள் மற்றும் பேக்கேஜிங் பெட்டிகள் போன்ற பொருட்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிறு, குறு, நடுத்தர தொழிலின் இரண்டாம் கட்ட உருக்கு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் வகையில் இரும்புக் கழிவுகளுக்குச் சுங்கத் தீர்வை விலக்களிக்கப்படுகிறது.

மெத்தனால், அசிடிக் ஆசிட் போன்ற சில முக்கிய ரசாயனங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்புக்கான கனரக இருப்பு மீதான சுங்கத் தீர்வை குறைக்கப்படுகிறது; உள்நாட்டு உற்பத்தித் திறன் உள்ள சோடியம் சயனைடு மீதான தீர்வை அதிகரிக்கப்படுகிறது. இது உள்நாட்டு மதிப்புக் கூடுதலை அதிகரிக்க உதவும்.

கவரிங் நகை இறக்குமதிக்கு ஊக்கத் தடை விதிக்கும் வகையில், கவரிங் நகை இறக்குமதி மீது குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.400 வீதம் சுங்கத் தீர்வை செலுத்த வேண்டும்.

மொபைல் ஃபோன் மின்னூக்கிகள் மின்மாற்றி, மொபைல் கேமராவுக்கான கேமரா லென்ஸ் ஆகியவற்றின் பாகங்கள் மற்றும் சில பொருட்களுக்கு, உயர் வளர்ச்சி மின்னணு பொருட்கள் உற்பத்தியை உள்நாட்டில் ஊக்குவிக்கும் தீர்வை சலுகைகள் வழங்கப்படும்.

மூலதனப் பொருட்கள் மற்றும் திட்ட இறக்குமதிகளில் சலுகை விகிதங்கள் படிப்படியாக அகற்றப்படும். இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் உள்நாட்டுத் துறை வளர்ச்சிக்கு உதவும் வகையில் 7.5 சதவீதம் என்ற மிதமான கட்டணம் வசூலிக்கப்படும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் சுங்க நிர்வாகம் முற்றிலும் தொழில்நுட்பமயமாக்கம். 2022 செப்டம்பர் 30-ந் தேதி வாக்கில் சுங்க தேசிய வலைத்தளத்தின் செயல்பாடு நடைமுறைக்கு வரும்.

ஏஓபி-க்கள் (ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு அமைக்கப்படும் கூட்டமைப்பு) மீதான கூடுதல் வரி உச்சவரம்பு 15 சதவீதமாக இருக்கும்.

தனி நபர் நிறுவனங்களுக்கும், கூட்டு நிறுவனங்களுக்கும் இடையேயான துணை வரியில் பாகுபாடு குறைக்கப்படும்.

எந்தவகையான சொத்துக்கள் பரிமாற்றத்திலிருந்தும் கிடைக்கின்ற நீண்டகால மூலதன லாபங்கள் மீதான துணை வரி 15 சதவீதமாக இருக்கும்.

உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தால் சட்டம் பற்றிய கேள்வி முடிவு செய்யப்படும் வரை மேல்முறையீடு தாக்கல் செய்வது ஒத்திவைக்கப்படும்.

பரிமாற்ற வி்வரங்களை பெறுவதற்கு மெய்நிகர் டிஜிட்டல் சொத்து பரிமாற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட தொகைக்கு ஒரு சதவீத அளவிற்கு டிடிஎஸ் (வருவாயிலிருந்து வரிப்பிடித்தம்) பிடித்தம் செய்யப்படும்.

தகுதி வாய்ந்த புதிய தொழில்களுக்கு வரிப் பயன் கிடைப்பதற்கான இணைப்புக்காலம் ஓராண்டிற்கு, 31.03.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இணைப்புக்கான கால வரம்பு ஏற்கனவே 31.03.2022 ஆக இருந்தது.

மாநில அரசு ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கிற்குப் பங்களிப்பு செய்யும் உரிமையாளர்களுக்கான வரிப்பிடித்த வரம்பு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கூட்டுறவுகளால் செலுத்தப்பட்ட குறைந்தபட்ச மாற்றுவாரி விகிதம் 18.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ரூ 1 கோடிக்கும் அதிகமாகவும், ரூ.10 கோடி வரையிலும் மொத்த வருமானம் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான கூடுதல் வரி 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் மதிப்பீடுகள் 2021-22: ரூ.34.83 லட்சம் கோடி, திருத்திய மதிப்பீடுகள் 2021-22: ரூ.37.70 லட்சம் கோடி. 2022-23-ல் மொத்த செலவினம் ரூ.39.45 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது

2022-23-ல் கடன் தவிர்த்த மொத்த வரவுகள் ரூ.22.84 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது

நடப்பாண்டில் நிதிப்பற்றாக்குறை : மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9% (பட்ஜெட் மதிப்பீடுகள் 6.8%) 2022-23-ல் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 6.4% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

1.5 லட்சம் தபால் அலுவலகங்களில் 100 சதவீதம் வங்கி அமைப்புக்குள் வரவுள்ளன.

வணிக வங்கிகள், 75 மாவட்டங்களில், 75 டிஜிட்டல் வங்கி யூனிட்டுகளை தொடங்கவுள்ளன.

மின்னணு சிப்கள் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.

உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்.

இந்நிலையில், இந்த பட்ஜெட் மக்களுக்கானது அல்ல என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், “வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பாஜக அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே இந்த 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் அமைந்திருக்கிறது.

தனிநபர் வருமான வரி விகிதத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த உழவர்களுக்கு நலத்திட்டங்கள் இல்லை, தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு நிதியுதவி இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் திட்டங்களும் இல்லை, மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்குக் கோரிய நிவாரண நிதி ஒதுக்கீடும் இல்லை. இந்த பட்ஜெட் தமிழகத்துக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தொடர்ந்து கோதாவரி – பெண்ணாறு - காவிரி நதி நீர் திட்டத்தின் விரிவான அறிக்கை மட்டுமே தயார் என்ற அறிவிப்பு இருப்பது ஆறுதல் அளித்தாலும் - அறிவிப்பினை செயல்படுத்த முதல்கட்ட நிதி ஒதுக்கீட்டினைக்கூட நிதிநிலை அறிக்கையில் காண முடியவில்லை.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தினைப் பேரூராட்சிப் பகுதிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீட்டினை 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் குறைத்திருப்பது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டத்தை முடக்குவதற்கான முயற்சியாக மட்டும் தெரியவில்லை; அடித்தட்டு மக்களின் கையில் ஒரு பைசா கூட இருக்கக் கூடாது என்ற எண்ணவோட்டத்தையே வெளிப்படுத்துகிறது.

இந்த பட்ஜெட்டை மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை என்று அடைமொழியிட்டு அழைப்பதே முற்றிலும் பொருத்தமானது” என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big