உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் சீனாவின் (China)  வுஹான் ஆய்வகத்திலிருந்து பரவவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துவருகிறது.  இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா.

சீனாவின் வைரஸ் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தான் கொரோனா வைரஸ் உருவானது என்றும் சீனா திட்டமிட்டு வைரஸை பரப்பியுள்ளது என்று குற்றச்சாட்டுகள் உலகெங்கிலும் எழுந்தன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதனை சீன வைரஸ் என்றே குறிப்பிட்டு வந்தார். 
உலகம் முழுவதும் இது குறித்து விசாரனை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், சீனாவில் (China) கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவான ரிஷிமூலம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனம் (WHO) முடிவு செய்தது.

இந்தநிலையில், ஆய்வினை மேற்கொண்ட பிறகு கொரோனா பரவல் குறித்து செய்தியாளர்களிடம் எடுத்துரைத்த உலக சுகாதார நிறுவனம், ‘கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து பரவியிருப்பதற்கு வாய்ப்பில்லை. இது விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கக் கூடிய வாய்ப்பு தான் அதிகம் உள்ளது. நாங்கள் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகள், ஏதேனும் விலங்குகளிடம், இந்த வைரஸ் (Corona Virus) உருவாகியிருக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதை உணர்த்துகிறது.” என குறிப்பிட்டது.

இது குறித்த விசாரணை மேலும் நடத்தப்பட்ட வேண்டியுள்ளது. இருப்பினும், சீனாவின் வுஹான் ஆய்வகங்களிலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கும் என்பதை ஏற்கும் வகையிலான எந்த தரவுகளும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.