தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இப்போதே சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
நாம் தமிழருக்கு கரும்பு விவசாயி சின்னம்
இதனடிப்படையில் தமிழகம், புதுவையில் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னமே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமமுகவுக்கு குக்கர் சின்னம்
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கும் 2017-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கொடுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசிகளைப் பரிபூரணமாக பெற்றிருக்கும் நம்முடைய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
அமமுகவினர் கொண்டாட்டம்
இதனிடையே அமமுகவினர், பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.ம.மு.க.வினர் கட்சியின் தேர்தல் பிரிவுச் செயலாளர் தென் மண்டல பொறுப்பாளர் எஸ்.வி. எஸ். பி. மாணிக்கராஜா தலைமையில் பஸ்டாண்டு தேவர் சிலை அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
புதுவையில் மட்டும் மநீமவுக்கு டார்ச் லைட்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுவையில் மட்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சின்னம் எதுவும் ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Post a Comment
0 Comments