Type Here to Get Search Results !

மறைந்த பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் உடலை அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் - சீமான்

பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களது மறைவு தமிழறிவுலகத்திற்கும், அரசியல் பண்பாட்டுத் துறைகளுக்கும் ‌மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்குமானப் பேரிழப்புஎனப் புகழாரம் சூட்டியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, முதுபெரும் தமிழறிஞரும், மகத்தான வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வாளருமான எனது பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், மற்றும் உறவுகள் துயரில் நானும் ஒருவனாய்ப் பங்கெடுக்கிறேன்.


எளிய கிராமத்தில் பிறந்த என்னைப் போன்ற எண்ணற்றவர்களுக்குக் கல்வியை மட்டுமல்லாது, தமிழுணர்வையும், மானுடச்சிந்தனையையும், சமூகப்பார்வையையும் அளித்த மகத்தான மாமனிதராவார். சமயங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்து அவர் நிகழ்த்தியிருக்கிற ஆய்வுகள் தமிழின அறிவுலகில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன. தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடிக் கண்டறிந்து ஆவணப்படுத்தி அவர் எழுதி இருக்கின்ற அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், சமயங்களின் அரசியல் போன்ற பல நூல்கள் தமிழினத்திற்கு அவர் வழங்கி இருக்கின்ற மகத்தான பெருங்கொடைகளாகும்.


இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக அவர் பணிபுரிந்த போது அவருடைய மாணவனாகப் பயின்ற அனுபவங்கள் மறக்க முடியாதவை. அவரால்தான் நான் உருவானேன். என் பேச்சில், என் எழுத்தில் என என் வாழ்வின் சகல விதத்திலும் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய எனது பேராசிரியர் மறைந்துவிட்டார் எனும் செய்தி ஏற்கவே முடியாத பெருந்துயரமாக மாறி, என்னை வாட்டுகிறது. நாம் தமிழர் என்கின்ற பெரும்படையை நாங்கள் கட்டியெழுப்பியபோது எங்களுக்கு வகுப்பெடுத்து வழிகாட்டிய பெருந்தகை அவர். மதுரை தியாகராயர் கல்லூரி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி எண்ணற்ற அறிஞர்களை, ஆய்வாளர்களை உருவாக்கிய பேரறிஞராவார். கடினமான ஆய்வு நூல்களைக்கூட எளிய தமிழில் சொல்லக்கூடிய அவரைப் போன்ற ஒரு மகத்தான எழுத்தாளுமை யாரும் இல்லை. அவருடைய இழப்புத் தனிப்பட்ட அளவில் என்னை வெகுவாகப் பாதித்திருக்கிறது. இன்றளவும் எனக்கு வழிகாட்டிக்கொண்டிருந்த ஒரு ஒளி அணைந்து விட்டதே? என்று கலங்கி நிற்கும் வேளையிலும் அவர் நம்மிடம் விட்டுச்சென்றுள்ள காலத்தால் அழியாத அவரது ஆய்வு நூல்களும் அவர் கற்பித்த பாடங்களும் இன்னும் பல தலைமுறைகளுக்குத் தமிழினத்தை வழிநடத்திச்செல்லும் என்ற பேருண்மை நம்பிக்கையுடன் மீண்டெழ வைக்கிறது. ஐயாவின் மறைவு தமிழறிவுலகத்திற்கும், அரசியல் பண்பாட்டுத் துறைகளுக்கும் ‌மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்குமானப் பேரிழப்பாகும். உரிய அரசு மரியாதையோடு ஐயாவின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

பெருந்தமிழர் நமது ஐயா தொ.பரமசிவன் அவர்களின் பெயர் தமிழினம் உள்ளவரை, தமிழ்மொழி வாழும் வரை மங்காத அறிவுப்பேரொளியாகச் சுடர்விடும். என் விழி முழுவதும் நிறைந்திருக்கின்ற கண்ணீரோடு என் பேராசிரியரின் பேரன்பிற்கு நன்றிப்பெருக்கோடு புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் அவர்கள் கூறியுள்ளார்.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big