ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி அவர்களை பெருமைப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.
ஆண்டுதோறும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறையை அவர் பின்பற்றி வருகிறார்.
தீபாவளி பண்டிகை
அதன்படி 2015-ம் ஆண்டு தீபாவளியை பஞ்சாப்பில் எல்லைப் படை வீரர்களுடன் கொண்டாடினார். 2016-ம் ஆண்டு தீபாவளியை இந்தோ-திபெத் எல்லைப் பகுதி வீரர்களுடன் கொண்டாடினார். இதேபோல் 2017-ம் ஆண்டு தீபாவளியை காஷ்மீரின் குரேஸ் பகுதியில் ராணுவ வீரர்களுடனும், 2018-ம் ஆண்டு இந்திய சீன எல்லையில் உள்ள ராணுவ முகாமிலும் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
வீரர்களுக்கு மரியாதை
இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், கடந்த ஆண்டு பதன்கோட்டிலும், ரஜவுரியிலும் ராணுவ வீரர்களை பெருமைப் படுத்தும் வகையில் அங்கு சென்று தீபாவளியை கொண்டாடினார். இந்நிலையில் இந்தாண்டு தீபாவளியை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் மோடி.
மோடி உரை
அப்போது பேசிய அவர், இந்திய வீரர்களின் வீரத்துக்கு ஈடு இணையே கிடையாது என்றும் தேசம் உங்களுடன் நிற்பதாகவும் கூறி எல்லை பாதுகாப்பு வீரர்களை பெருமிதப்படுத்தினார். மேலும், மக்களின் அன்பை சுமந்து வந்திருப்பதாக பேசிய மோடி, வீரர்கள் முகத்தில் மகிழ்ச்சியை காணும் போது தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுவதாக தெரிவித்தார். வழக்கமான குர்தா ஆடையை தவிர்த்து ராணுவ உடையில் மிடுக்காக காட்சியளித்தார் மோடி.
நன்றிக்கடன்
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் கலந்துகொண்டனர். முன்னதாக இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நாட்டை பாதுகாக்கும் வீரர்களை கவுரவிக்கும் பொருட்டு நாம் விளக்குகளை ஏற்ற வேண்டும். எல்லையில் நாட்டுக்காக உழைக்கும் வீரர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
0 Comments