அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமெரிக்கர்கள் வாக்களிக்க வேண்டாம் என முன்னாள் அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இருவரும் களத்தில் ஆக்ரோஷமாக நிற்கின்றனர்.
டிவி நேர்காணல்
புளோரிடா மாகாணத்தில் ஜோ பிடனை ஆதரித்து பிரசார கூட்டம் ஒன்றில் முன்னாள் அதிபர் ஒபாமா பேசினார். அவர் பேசுகையில், ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூட 60 நிமிடம் உட்கார முடியாதவராக இருக்கிறார் டிரம்ப். அனேகமாக கேட்கப்பட்ட கேள்விகள் கடினம் என அவர் நினைத்திருக்கலாம்.
கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல முடியாத டிரம்ப்பால் 2-வது முறையாக எப்படி ஆட்சி நிர்வாகத்தை நடத்த முடியும்? சுயநலத்துக்காக, பணக்கார சகாக்களுக்காகவே மீண்டும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் டிரம்ப்பின் திட்டம்.
கொரோனா தடுப்பு திட்டம் என்ன?
கொரோனாவை தடுப்பதற்கு அடுத்த கட்டமாக என்ன திட்டம் இருக்கிறது? கொரோனா பரவலைத் தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார் டிரம்ப். கொரோனாவிடம் இருந்து தன்னையே பாதுகாக்க இயலாதவர் டிரம்ப்.
யதார்த்தத்தை ஏற்க வேண்டும்
அமெரிக்காவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதை கேட்டால் எந்த திட்டமும் இல்லை என்பார். எது யதார்த்தமோ நடைமுறையோ அதை ஒப்புக் கொள்வதற்கு கூட தயங்குகிறவர்தான் டிரம்ப். அமெரிக்கர்களின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் டொனால்ட் டிரம்ப்புக்கு வாக்களிக்கக் கூடாது.
Social Plugin
Social Plugin