திருப்பதி கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது ஆந்திர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ் திரையுலக மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் நடிகர் சிவக்குமார், சிறந்த இலக்கிய பேச்சாளர். கந்தன் கருணையில் முருகனாகவும், திருமலை தெய்வத்தில் திருமால் ஆகவும், காரைக்கால் அம்மையார் படத்தில் சிவனாகவும் வேடம் ஏற்று சினிமாவில் பிரபலமானவர் சிவக்குமார்.
கடந்த ஆண்டு கல்லூரி ஒன்றில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற சிவக்குமார், இலக்கியம், ஆரோக்கியம், இல்லறம் என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது, தான் திருப்பதி கோவிலுக்கு செல்வதில்லை என்றும் அங்கு கால்நடையாக நடந்து செல்லும் பக்தர்களை மதிக்காத தேவஸ்தானம், கொஞ்சும் குமரியுடன் இரவெல்லாம் கூத்தடித்து விட்டு காலையில் குளிக்காமல் சாமி கும்பிட செல்லும் செல்வந்தர்களுக்கு கும்பத்துடன் மரியாதை அளிப்பதை தான் நேரில் பார்த்ததாக தெரிவித்தார்.
சிவக்குமாரின் இந்த பேச்சு ஒரு வருடம் கழித்து அண்மையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து திருப்பதி கோவில் குறித்து அவதூறு பரப்புவதாக கூறி தேவஸ்தானம் சார்பில் சிவக்குமார் மீது திருமலை டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஆந்திர போலீசார் நடிகர் சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே கருத்தரங்கில் தஞ்சாவூர் கோவிலில் தீண்டாமை இருப்பதாக நடிகர் சிவக்குமார் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0 Comments