Type Here to Get Search Results !

#LiveTamilTV

நாடாளுமன்ற ஆசனத்தை கைப்பற்றிய மருத்துவர் அர்ச்சுனா – பெரும் அதிர்ச்சியில் தமிழ் கட்சிகள்!!


இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி தமிழர் தேசிய கட்டமைப்பையும் தகர்த்துள்ளது. தற்போது வெளியாகிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய வட மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தி  மூன்று ஆசனங்களை கைப்பற்றி உள்ளது.

தமிழர் தாயகத்தில் பாரம்பரிய தமிழ்கட்சி பிளவுபட்டு பல பிரிவுகளாக களமிறங்கி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. மாறாக கடந்த சில மாதங்களாக பெரும் பேசுபொருளாக இருந்த வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் மீதான மக்களின் ஆதரவு தமிழ் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறுகிய காலத்தில் பிரபலமான வைத்தியர் தற்போது வெளியான இறுதி முடிவிற்கமைய ஒரு ஆசனத்தை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024: 141 இடங்களைக் கைப்பற்றி அநுர குமாரவின் கூட்டணி பாரிய வெற்றி.

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கான அனைத்து மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களைக் கைப்பற்றி நாடாளுமன்ற அதிகாரத்தைத் தன்வசப்படுத்தியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் 225 ஆசனங்கள் காணப்படுகின்ற நிலையில் 113 ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் கட்சி பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்ட கட்சியாகக் கருதப்படும்.

இந்நிலையில் இந்தத் தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் 141 ஆசனங்களைத் தன்வசப்படுத்தியுள்ளது.

இதேவேளையில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை தேர்தல் ஆணைக் குழுவினால் வெளியிடப்பட வேண்டும். 29 உறுப்பினர்கள் கட்சிகளுக்குப் பிரிந்து செல்லும் எண்ணிக்கை தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் மற்றும் நாடாளுமன்ற ஆசனங்களின் விவரங்கள் விரிவாக:

  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,863,186 வாக்குகள் (141 ஆசனங்கள்)
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,968,716 வாக்குகள் (35 ஆசனங்கள்)
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 500,835 வாக்குகள் (3 ஆசனங்கள்)
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 350,429 வாக்குகள் (2 ஆசனங்கள்)
  • இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) – 257,813 வாக்குகள் (7 ஆசனங்கள்)
  • சர்வஜன அதிகாரம் (SB) – 178,006 வாக்குகள் (0 ஆசனம்)
  • ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV) – 83,488 வாக்குகள் (0 ஆசனம்)
  • வேறு கட்சிகள் – 945,533 வாக்குகள் (8 ஆசனங்கள்)

தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளதுடன் மொத்த வாக்களிப்பில் அதன் பங்கு 61.56% எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடாளுமன்றத் தேர்தலில் 141 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட தேசிய மக்கள் சக்திக்கு, 18 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி 1,968,716 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளதுடன், அது மொத்த வாக்களிப்பில் 17.66% எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 35 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு, 5 தேசிய பட்டியல் உறுப்புரிமைக்கான அனுமதி கிடைத்துள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், அந்தக் கட்சி 500,835 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி மொத்த வாக்களிப்பில் 4.49% வாக்குகளை சுவீகரித்துள்ளது.

புதிய ஜனநாயக முன்னணிக்கு மொத்தமாக 3 ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில், இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் அந்தக் கட்சிக்கு கிடைத்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 350,429 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை அந்தக் கட்சிக்கு மொத்தமாக இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 257,813 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து அக்கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சிக்கு 178,006 வாக்குகள் கிடைத்துள்ள பின்னணியில் அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம் கூடக் கிடைக்கவில்லை. எனினும் கட்சி பெற்ற வாக்கு விகிதத்தின் அடிப்படையில் ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.

தமிழர் பகுதிகளின் இறுதித் தேர்தல் முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர்த்த ஏனைய அனைத்து தமிழர் பகுதிகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 96,975 வாக்குளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெற்றுக்கொண்டது. ஆனால் அது தவிர இதர தமிழர் பகுதிகளை தேசிய மக்கள் கட்சி கைப்பற்றியுள்ளது.

மலையக தமிழர்கள் அதிகம் வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளதுடன் இரண்டாவது இடத்தை ஐக்கிய மக்கள் சக்தியும், மூன்றாவது இடத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் கைப்பற்றியுள்ளன.

அதேபோன்று மலையக மக்கள் செறிந்து வாழும் கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, களுத்துறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி அமைந்துள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வசம் கடந்த முறை காணப்பட்ட யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இம்முறை தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது.

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்கள் அடங்கிய தேர்தல் மாவட்டமாக வன்னி தேர்தல் மாவட்டம் விளங்குகிறது.

கண்டி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்திருந்தது. ஆனால் இந்த முறை 2020 தேர்தலில் நான்காவது இடத்தைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் காணப்பட்ட நுவரெலியா மாவட்டம், இம்முறை தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 79,460 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தது. அதோடு, இம்முறை அந்த வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது.

அத்துடன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்திய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளாது பின்னடைவைச் சந்தித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை இம்முறை பெற்றுக் கொண்டதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கி கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்திருந்ததுடன் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் அப்போது எட்டாவது இடத்தை பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, முதலாவது இடத்தை பெற்றுள்ளது.

ஆனால், முன்னர் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன இம்முறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் நிலையில், கடந்த முறை முஸ்லிம் கட்சிகள் பெற்ற வாக்கு வங்கியில் இம்முறை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் இடத்தை பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி, இம்முறை தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றதுடன் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

மூன்றாவது இடத்தை கடந்த முறை பெற்றுக்கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அதே மூன்றாவது இடத்தில் இம்முறையும் காணப்படுகின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது இடத்தை பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இம்முறை பாரிய பின்னடைவை திருகோணமலை மாவட்டத்திலும் எதிர்நோக்கியுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்த நிலையில், இம்முறை அந்தக் கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்தில் 6 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பிடித்துள்ளது. அதேவேளையில், ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

பதுளை மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்தது. ஆனால், அப்போது மூன்றாவது இடத்தை பெற்ற தேசிய மக்கள் சக்தி இம்முறை முன்னிலை வகிக்கிறது.

வரலாற்றில் முதல் முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

இலங்கையின் தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் அரசியல் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், வரலாற்றில் முதல் தடவையாக பெரும்பாலான தமிழர் பகுதிகளில் தேசிய கட்சியாக விளங்கும் புதிய ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகளே வெற்றி பெறுவது வழக்கமானது.

எனினும் மத்தியை ஆட்சி செய்யும் கட்சியொன்று இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான தமிழர் பகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய தென்னிலங்கை மக்களோடு வட, கிழக்கு தமிழ் மக்களும் அந்த மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்பதுதான் இந்தத் தேர்தல் முடிவுகளில் வெளிவந்த மிகவும் தெளிவான விடயம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்கூட ஐக்கிய மக்கள் சக்திக்கு கணிசமான ஆதரவு வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் இருந்தாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் நேரடியாகவே தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய “இது அவர்கள் மாற்றத்தை விரும்பியதைக் காட்டுகிறது. அடுத்தது தமிழர் பிரதேசங்களில் உள்ள அரசியல் விரக்தி நிலைமையைக் காட்டுகிறது. அவர்கள் தமது பிரதிநிதிகளை ஏதோவொரு காரணத்திற்காக அவர்கள் மீதுள்ள ஆத்திரத்தை, அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

குறிப்பாக வடக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு வாரத்திற்கு முன்னர் சென்று ஆற்றிய உரை அங்குள்ள மக்களின் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் குடும்பமாகக் காணப்பட்ட ராஜபக்ஸ குடும்பம், இம்முறை நாடாளுமன்ற அரசியல் களத்தில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஸ, பஷில் ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட மேலும் பல ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் நேரடி அரசியல் ஈடுபட்டு வந்த நிலையில் இம்முறை தேர்தலில் சமல் ராஜபக்ஸவின் புதல்வரான ஷஷிந்திர ராஜபக்ஸ மாத்திரமே தேர்தலில் போட்டியிட்டார்.

நாமல் ராஜபக்ஸவின் பெயர், தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டதுடன் ஏனைய ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் நாடாளுமன்ற களத்தில் இருந்து வெளியேறியிருந்தனர்.

இந்த நிலையில், ஷஷிந்திர ராஜபக்ஸ மொனராகலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட போதிலும், அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம்கூடக் கிடைக்கவில்லை. ஆனால் தேசியப் பட்டியலில் அக்கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இதன்படி ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் எவரும் இந்தத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. ராஜபக்ஸ குடும்பத்தின் சுமார் 87 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில், தனது சொந்த மண்ணில் தேர்தல் ஒன்றில் போட்டியிடாத முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த 2019ஆம் ஆண்டு மீண்டும் ராஜபக்ஸ குடும்பம் ஆட்சி அமைத்த நிலையில் அப்போது தெரிவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் ராஜபக்ஸ குடும்பத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் முழுமையாக இழந்தமையே இதற்கான காரணமாக அமைந்துள்ளது.

சஜித், ரணில் கட்சிகள் பாரிய பின்னடைவு

நாட்டின் பெரும்பாலான இடங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

குறிப்பாக தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் கட்சிகள் வெற்றி பெற்று வந்த நிலையில் இம்முறை தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளை தேசிய கட்சி ஒன்று கைப்பற்றியுள்ளது.

அத்துடன் தேசிய ரீதியில் செயற்படும் ஏனைய கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன. குறிப்பாக கடந்த நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக விளங்கிய சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டதாகக் கூறப்படும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big