மத்திய அரசு வாதம் ஏற்பு.. ஓபிசி மாணவர்களுக்கு இவ்வாண்டு 50% கோட்டா இல்லை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இவ்வாண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்படக் கூடிய மருத்துவ இடங்களில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், ஒரு குழுவை அமைக்கவும், அந்த குழு கொடுக்கும் பரிந்துரைப்படி இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என்றும் கடந்த ஜூலை 27ம் தேதி உத்தரவிட்டது.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள சூழலில், உடனடியாக இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை எடுக்க முடியாது. இட ஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு வாதம் செய்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு இவ்வழக்கின் தீர்ப்பை இன்றைக்கு வழங்குவதாக ஒத்திவைத்தது.
இந்த தீர்ப்பின் மீது கடும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இன்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இவ்வாண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டது.
இதுகுறித்து திமுக எம்பி வில்சன் கூறுகையில், இம்முறை ஓபிசியை சேர்ந்த ஒருவருக்கும் பலன் கிடைக்காமல் போயுள்ளது. ஹைகோர்ட் அமைத்த கமிட்டி அடுத்த ஆண்டு முதல் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். ஆனால் அந்த கமிட்டியில், துறை சார்ந்த நிபுணர்கள் நியமிக்கப்படவில்லை. செப்டம்பர் 7ம் தேதிதான் கமிட்டி ஆரம்பித்துள்ளது. செப்டம்பர் 27ம் தேதிதான் முதல் மீட்டிங் நடந்துள்ளது. இவ்வாறு வில்சன் தெரிவித்தார்.
Social Plugin
Social Plugin