கரிநாள் பேரணி - போராட்டத்துக்கு ஆதரவு கோரி யாழ். பல்கலைச் சமூகம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றது.
தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை பலவீனமடையச் செய்வதன் வாயிலாக அதிகாரப் பகிர்விற்கான கோரிக்கையை பலவீனமடையச் செய்யலாம் என்று சிறிலங்கா அரசு எண்ணுகின்றது.
மேலும் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக தீர்வு என்னும் பெயரில் சிறிலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குட்பட்ட 13 ஆம் திருந்தத்தினுள் தமிழ் மக்களை முடக்குவதற்கு அரச மற்றும் அரச ஆதரவு சக்திகள் முயன்று வருகின்றன.
இவ்வாறு ஒரு பக்கம் ஆக்கிரமிப்பை சிறிலங்கா அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் அதேவேளை, தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமையை ஏற்கவோ, இழைக்கப்பட்ட கொடுமைக்கான நீதியை வழங்கவோ மறுத்து வருகின்றது.
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுபற்றிப் பேசாமல் தனது பொருளாதார நலன்களுக்காக உலகச் சமூகத்துக்கு முன் உதட்டளவில் நல்லிணக்கம் பேசி வருகின்றது.
இவ்வாறானதொரு சூழலில் பெப்ரவரி 04திகதியை தமிழர் தேசத்தின் கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி, பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து கறுப்பு நாளை முன்னெடுக்க அழைப்பு விடுக்கின்றோம்.
01. வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோடு, தமிழர் தாயகத்தின் மீதான திட்டமிட்ட சிங்கள-பௌத்த குடியேற்றங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புக்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு தமிழர் தாயகத்தின் நில ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக தற்போது கையறு நிலையில் உள்ள கிழக்கு மாகாணம் மீதான ஆக்கிரமிப்புக்கள் தாமதமேதுமின்றி முடிவுக்கு கொண்டு வரப்படவும் வேண்டும்.
02. ஈழத்தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்கும் வழிநடத்துவதற்கும் சுயநிர்ணய உரிமை உடையவர்களாவர் என்பதை ஏற்று ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்.
03. தமிழ் மக்களிற்கான அரசியற்தீர்வு தொடர்பான முயற்சிகள் யாவும் திம்புக் கோட்பாட்டினை அடியொற்றியே முன்னெடுக்கப்பட வேண்டும். சிறிலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குட்பட்ட 13 ஆம் திருத்தத்தை முற்றாக நிராகரிக்கின்றோம்.
04. தமிழர் தாயகத்தில் முடிவற்றுத் தொடரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இராணுவப் பிரசன்னம், சிங்கள-பௌத்தமயமாக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை போன்றவற்றிற்கான உரிய தீர்வுகள் தாமதமேதுமின்றி வழங்கப்பட வேண்டும் என்பதோடு, ஆக்கிரமிப்புக்களை முன்னின்று நடாத்தும் அரச இயந்திரத்தையும் அதன் நிறுவனங்களையும் கண்டிக்கின்றோம் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகம் விநியோகித்துவரும் துண்டுப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
0 Comments