Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ -------------------------------------------------------------------------------- ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
---------------------------------------------------------------------------------

சிறிலங்காவின் சுதந்திர தினம் ; தமிழர் தேசத்தின் கரிநாள் – முள்ளிவாய்க்கால் போராட்டத்தின் அறிக்கை!

தமிழ் தேசிய இனம் என்ற கௌரவத்துடன் தமிழர்கள் வாழ வழி செய்யப்படவேண்டும் எனவும், இது வெறுமனே எமது உறவுகளைத் தேடும் போராட்டம் அன்று, எமக்கான உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்திற்கான தொடக்கப் புள்ளியே இது என்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.


வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து செல்வபுரம் பகுதி வரை இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்ட முடிவில் இவ் அறிக்கை வாசிக்கப்பட்டது.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இன்றைய தினம் பெப்ரவரி 4 ஆம் நாள். ஆங்கிலேயர் 74 வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு சுதந்திரம் அளித்துச் சென்ற நாள். ஆனால், அந்த நாளை சிங்கள தேசம் தனக்கு மட்டுமே சுதந்திர நாளாக்கி, தமிழ் இனத்தை அடிப்படுத்தி, அதை தமிழருக்கான கரிநாள் ஆக்கியது.

காலங்காலமாக இது தொடர்கின்றது. அதற்கு எதிராகக் கதைப்பவர்களும், செயற்பட்டவர்களும் குண்டாந்தடியால் அடிக்கப்பட்டனர்.

அடக்கு முறைகளின் ஒரு கட்டமாக 1956 தனிச் சிங்களச் சட்டத்தை அரசு பிரகடனப்படுத்தியது.

சிங்களம் படிக்காத அரச உத்தியோகத்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த அநீதிகள் அரங்கேறிய அதேநேரம், தலைநகர் கொழும்பில் தமிழர்கள் மீது இனஅழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழர்கள் முதுகில் சிங்கள ஸ்ரீ சூடுவைக்கப்பட்டது.

பச்சைக் குழந்தைகள், வயோதிபர்கள் என்ற வித்தியாசம் இன்றி, கொதிக்கும் தார்ப் பீப்பாய்க்கள், தோசைக்கல் என்பவற்றில் அவர்கள் போடப்பட்டனர்.

இந்த அவலம் போல காலத்துக்கு காலம் எங்காவது ஒரு மூலையில், தமிழர்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் போதெல்லாம் இன அழிப்பு என்னும் பயங்கரத்தை மேற்கொண்டு தமிழர்கள் உணர்வு அழிக்கப்பட்டது.

மேற்படி எல்லாத் தடைகளையும் தாண்டி, மக்களின் பேராதரவுடன் மேற்கொள்ளப்பட்ட தாயக விடுதலைப் போராட்டம் கூட 2009 மே 18 இல் இதே முள்ளிவாய்க்காலில் மௌனிக்கச் செய்யப்பட்டது.

பயங்கரவாதம் என்ற பூச்சாண்டியைக் காட்டி, சர்வதேசத்தின் உதவிகளைப் பெற்று, தமிழர்களின் உரிமைப் போராட்டம் இந்த மண்ணிலே மௌனிக்கச் செய்யப்பட்டது.

இதே இடத்தில் தான் எமது உறவுகளை அரச படைகளிடம் கையளித்துவிட்டு, எம் உறவுகளைத் தேடி வயோதிபர்கள் ஆகிய நாம் போராடி வருகின்றோம்.

எமது உறவுகளைத் தேடும் எமது போராட்டமானது, வெறுமனே உறவுகளைத் தேடும் போராட்டம் அன்று, எமக்கான உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்திற்கான தொடக்கப் புள்ளியே இது.

எமது உறவுகளுடன் வாழும் உரிமைக்காக, அவர்களுக்கு என்ன நடந்தது என்று உண்மையை அறியும் உரிமைக்காக, அவர்களை காணாமல் ஆக்கியவர்களை நீதியின் முன் நிறுத்தியே தீர வேண்டும் என்ற எம் உணர்விற்கான போராட்டமே இது.

இப் போராட்ட நெருப்பானது, தமிழ் உணர்வாளர்கள், பற்றுள்ளவர்கள் அனைவராலும் வளர்ப்பிக்கப்பட்டு, எமது உரிமையைப் பெறும் சாத்வீக போராட்டம் என்னும் பெரும் நெருப்பாக தமிழர்கள் நெஞ்சிலே ஏற்றப்பட வேண்டும்.

தமிழ் தேசிய இனம் என்ற கௌரவத்துடன் தமிழர்கள் வாழ வழி செய்யப்படவேண்டும். அற்பசொற்ப சலுகைகளுக்காகவும், தம் சொந்த ஆசாபாசங்களுக்காகவும், சிங்கள அரசுக்கு துணை போனவர்களும், அவர்களுடன் சேர்ந்து இருப்பவர்களும் தம் இனத்திற்கு துரோகம் செய்வதை உணர்ந்து திருந்த வேண்டும் அல்லது, மக்கள் போராட்டம் அவர்களைத் திருத்த வேண்டும்.

இலட்சக்கணக்கானவர்களை இனஅழிப்புச் செய்த இந்த அரசாங்கம், அதற்கான நீதியை மறுதழிக்கும் அதேநேரம், திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், தமிழர்களின் காணிகள் ஆக்கிரமிப்பு, புத்த விகாரைகள் அமைப்பு, இந்துக் கோவில்களை விகாரையாக்கும் முயற்சி, புனித பூமித் திட்டம் ஆகியவற்றை வேகமாக மேற்கொண்டு வருகின்றது.

போதைவஸ்துப் பாவனை தமிழர்களிடையே திட்டமிட்டுப் புகுத்தப்பட்டு கலாசாரப் பிறழ்வுகள் ஊக்கிவிக்கப்படுகின்றன. இவற்றை கண்டும் காணாமல்போல எமது அரசியல் தலைமைகள், இதை நாமும் பாரத்துக் கொண்டு வாழவிருக்கப் போகிறோமா?,

இந்தப் புனிதமான இடத்திலே நாம் அனைவரும் சாதி, மத பேதங்களை மறந்து தமிழராய் ஒன்றிணைவோம், தமிழர் உரிமைக்காய் ஒன்றாய் பயணிப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோமாக.

கட்சிபேதமின்றி அனைத்துத் தமிழ் அரசியல்வாதிகளும் எமது உரிமைக்காய் உழைப்போம். தமது நலனுக்கான எமது உரிமைகளை விட்டுக் கொடுப்பவர்களை, தேர்தலிலே தகுந்த பாடம் புகட்டி ஓரங்கட்டுவோம்.

தமிழனாய் வாழ்வோம். தமிழ் உணர்வுடன் வாழ்வோம்.- என்றுள்ளது.

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big