ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தொடர்ந்து தாக்குதலை ஏற்படுத்தி ஒரு வாரத்திற்குள் நாடு முழுவதையும் கைப்பற்றினர்.ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் கனடா,இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாட்டு மக்கள் உடனடியாக வெளியேறுவதற்கு அந்நாடுகளில் இருந்து விமானங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
“ஆப்கானிஸ்தானில் வாழும் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு உதவுங்கள் “, “ஆப்கானிஸ்தானை காப்பாற்றுங்கள்” மற்றும் ” நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள் ” என்று எழுதப்பட்ட பதாகைகளை “celebration square” -ல் ஏந்தியபடி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஆப்கானிஸ்தானின் ஆக்கிரமிப்பை கண்டித்து சர்வதேச மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆப்கானிஸ்தான் கொடிகளை அசைத்து நாட்டிற்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டுமென்று கோரினர்.
“ஆப்கானிஸ்தானில் மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் போன்றவற்றிற்கு உதவும் வகையில் ஆதரிப்பதற்காக இங்கு கூடியுள்ளோம்” என்று காதிர் ஜலிலி தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் அவரது 92 வயது நிறைந்த பாட்டி உட்பட உறவினர்களும் அங்கு இருப்பதாக கூறினார்.
“நாங்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும், அங்குள்ள எங்கள் மக்கள் அனுபவிக்கும் வேதனையையும்,துன்பங்களையும் நாங்கள் உணர்கிறோம் ” என்று தெரிவித்தனர்.
தாலிபான் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை(15) ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் அதிரடியாக நுழைந்ததும் ஆப்கானிஸ்தான் பிரதமர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகளை உருவாக்க அமெரிக்கா போன்ற நாடுகள் பல பில்லியன் டாலர்கள் செலவு செய்து கிட்டத்தட்ட இருபது வருடங்களாக முயற்சி செய்தபோதிலும் தாலிபன் அமைப்பு ஒரே வாரத்திற்குள் நாடு முழுவதையும் கைப்பற்றி பிரதமர் மாளிகைக்குள் நுழைந்தது அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக கூறினார்.
20 ஆயிரம் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்க கனடா முடிவு
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் ஆக்கிரமித்து வரும் நிலையில், அபாயத்திலிருக்கும் 20,000 ஆப்கன் அகதிகளை ஏற்றுக்கொள்ள கனடா முடிவு செய்துள்ளது.
கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சரான Marco Mendicino, நேற்று இந்த தகவலை வெளியிட்டார். குறிப்பாக, தாலிபான்களால் குறிவைக்கப்படும் அபாயத்திலுள்ள பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், கனேடிய இராணுவத்துக்கு உதவிய மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோர் வரவேற்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முதலான நாடுகள் தங்கள் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தாலிபான்கள் வேகமாக கைப்பற்றி வருகிறார்கள்.
ஏற்கனவே அவர்கள் கைப்பற்றிய இடங்களில், பெண்களை பொது இடத்தில் சவுக்கால் அடித்தல், திருடியவர்களை பொதுமக்கள் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லுதல் முதலான அவர்களது முரட்டுத்தனமாக தண்டனைகள் துவங்கிவிட்டதை பல வெளிநாட்டு ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
Post a Comment
0 Comments