ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் அரசியலுக்கு வர விருப்பம் தெரிவித்திருக்கிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாம் என்றும் சொல்கிறார்...
சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என்ற குழப்பத்திலும், நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையிலும் தமிழகத்தில் தசாப்தங்கள் கழிந்தன.
தற்போது மற்றுமொரு சூப்பர் ஸ்டார் அரசியலில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். இது உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானின் விருப்பம். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜாக்கி சான், சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் பாராட்டினார். அந்தக் 'கட்சியின் மகத்துவத்தைக் பார்க்கிறேன்' என்றும் தெரிவித்தார்.
ஹாங்காங்கில் ஜனநாயகம் வேண்டும் என்று கோரும் மக்களின் மீது அடக்க்குமுறையை கட்டவிழ்த்துவிடும் சீன அரசின் போக்கை ஏற்கனவே ஆதரித்து பேசியிருக்கிறார் இந்த சூப்பர் ஸ்டார். தற்காப்பு கலை வீரர் ஜாக்கி சான், தற்காப்பில்லாமலா இப்படி பேசியிருப்பார்? அதுமட்டுமல்ல, சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (Chinese Communist Party) சேர விரும்பும் தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாகி 100 ஆண்டுகள் ஆகிறது. அதனைக் ஆளும் கட்சி கொண்டாடுகிறது. அதை முன்னிட்டு அதிபர் ஜீ ஜின்பிங் (President Xi Jinping) ஜூலை 1ஆம் தேதி ஆற்றிய உரையை மதிப்பிடுமாறு சீனத் திரைப்பட பிரபலங்களை கம்யூனிஸ்ட் கட்சி அழைத்திருந்தது. தியனன்மென் சதுக்க படுகொலை (Tiananmen Square massacre) நடந்த இடத்திலிருந்து குடிமக்களுக்கு அதிபர் மக்களுக்கு உரையாற்றினார். இந்த நிகழ்வில், சீன திரைப்பட சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் ஜாக்கி சான், சி.சி.பி தனது வாக்குறுதிகளை 'நிறைவேற்றியதற்காக' பாராட்டினார்.
"ஆளும் கட்சியின் (Communist Party of China) மகத்துவத்தை என்னால் காண முடிகிறது, அது" தான் சொல்வதை செய்யும்…. நான் கட்சியின் கட்சியின் உறுப்பினராக விரும்புகிறேன்” என்று அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது,
அதிரடி சூப்பர் ஸ்டார் 2013 முதல் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டில் (Chinese People's Political Consultative Conference) உறுப்பினராக இருந்து வருகிறார். சீனாவின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் முக்கிய கொள்கை விஷயங்கள் குறித்து அரசாங்கத்திற்கு கருத்துக்களை வழங்குவார்கள்.
2019 ஆம் ஆண்டில், ஜாக்கி சான் தனது சொந்த நகரமான ஹாங்காங்கில் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள் மீது சீனாவின் வன்முறை ஒடுக்குமுறை குறித்து அவர் கூறிய கருத்துக்களுக்கு பரவலான விமர்சனங்கள் எழுந்தன. அதோடு ஜாக்கி சானுக்கு சர்வதேச அளவில் பின்னடைவும் ஏற்பட்டது.
மாணவ போராட்டக்காரர்களுக்கு எதிரான அரசாங்க நடவடிக்கைகளை அவர் கண்டிக்க மறுத்துவிட்டார், சீனாவின் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை கண்டிக்க சர்வதேச சமூகம் இணைந்து செயல்பட்ட நிலையிலும் ஜாக்கிசான் மவுனம் காத்தார்.
சவுத் சீனா மார்னிங் போஸ்டு (South China Morning Post) பத்திரிகைக்கு ஜாக்கி சான் அளித்த பேட்டியில், "நான் பல நாடுகளுக்குச் சென்றுள்ளேன், அண்மை ஆண்டுகளில் நம் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது என்று நான் சொல்ல முடியும். நான் எங்கு சென்றாலும் சீனராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன், மற்றும் ஐந்து- நட்சத்திரமிட்ட சிவப்புக் கொடி 'உலகம் முழுவதும் எங்கும் மதிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
"ஹாங்காங்கும் சீனாவும் எனது பிறப்பிடம், என் வீடு. சீனா எனது நாடு, என் நாட்டை நேசிக்கிறேன், நான் எனது வீடான ஹாங்காங்கையும் நேசிக்கிறேன். ஹாங்காங்கில் விரைவில் அமைதி திரும்பும் என்று நம்புகிறேன்" என ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.
Post a Comment
0 Comments