சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், மாற்றத்திற்கான மாவட்ட இளைஞர் பேரவை, பூந்தளிர் மாவட்ட பெண்கள் அமைப்பு மற்றும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு உள்ளிட்ட அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு பேராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டிருந்தனர்.
அதேநேரம், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட றெட்பானா சந்திப் பகுதியில் நான்கு கிராமங்களை சேர்ந்த மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சிறுமியின் மரணத்திற்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தும், சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகவும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
மாணிக்கபுரம், இளங்கோபுரம், வள்ளுவர்புரம், பாரதிபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மகளிர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தினை வழங்க வேண்டும் என அவர்கள் இதன்போது ஒன்றிணைந்து வலியுறுத்தியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி கண்டி - மடுல்கலை மேற்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் இன்று முற்பகல் குறித்த பகுதியின் தொழிற்சாலைக்கு முன்பாக இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், கேகாலையிலும் சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
Post a Comment
0 Comments