சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த யூரோ கோப்பை கால்பந்து தொடர் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாம் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள டென்மார்க் பின்லாந்து அணிகள் விளையாடினர்.
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று டென்மார்க் மற்றும் பின்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் களத்திலேயே மயக்கமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கிரிஸ்டியன் எரிக்சென் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கிரிஸ்டியன் எரிக்செனுக்கு மருத்துவமனையில் சுயநினைவு திரும்பியுள்ளது. அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நலமுடன் இருப்பதாகக் கூறினர். இந்த செய்தி கிடைத்த பின்னரே, மைதானதில் இருந்த வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் சற்று நிம்மதி ஏற்பட்டது.
வீரர் திடீரென மயங்கி விழுந்ததால் முதலில் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. இந்தப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை பின்லாந்து வீழ்த்தியது.