அமெரிக்க ஊடகமான வொஷிங்டன் போஸ்டில் வெளியான ஒரு கட்டுரையை ஸ்ரீலங்கா வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே கடுமையாக சாடி கருத்து வெளியிட்டுள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரும், 2009இல் கொல்லப்பட்டவருமான லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி அஹிம்சா விக்ரமதுங்கவினால் எழுதப்பட்ட கட்டுரை தொடர்பிலேயே, ஜயநாத் கொலம்பகே தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
தனது தந்தையின் கொலைக்கு நீதி வழங்க மறுத்துள்ளமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை, தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மீது சுமத்தியுள்ள அஹிம்சா விக்ரமதுங்க தனது கட்டுரையில் பல விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.
ஸ்ரீலங்காத் தலைவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை விதிக்க சர்வதேச சமூகத்தை அணிதிரட்டுவதன் மூலம், ஸ்ரீலங்காவை அழித்து அதன் வீழ்ச்சியைக் காணும் கூட்டு முயற்சியே இதுவென வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே சாடியுள்ளார்.
ஸ்ரீலங்காவை அழிக்க பலர் செயற்படுவதாகவும் கொலம்பகே சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர் குழுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ள அஹிம்சா, சில கட்சிகளால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது தந்தையின் கொலைக்கு நீதி தேடுவதற்கான அஹிம்சாவின் முயற்சிகளையும், உரிமையையும் வரவேற்கின்ற அதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் நாடு சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், அவர் அவ்வாறு செயற்படுவது துரதிர்ஷ்டவசமானது என, அமைச்சர் கெஹலிய மற்றும் கொலம்பகே ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை “நான் அவரை கடுமையாகவும் தைரியமாகவும் இருக்க ஊக்குவிக்கிறேன், ஆனால் நேரம் சரியாக இல்லாததால் அவளுடைய எல்லா முயற்சிகளும் நீர்த்துப்போகும் என்பதால் நான் அவளுக்காக வருந்துகிறேன்.” என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்காவில் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான அழுத்தங்களை அமெரிக்கா கொடுக்கவேண்டும் என அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க தொடர்பில், வொஷிங்டன் போஸ்டில் வெளியான கட்டுரை தொடர்பில் வெளியிட்ட கருத்தில் வெளிவிவகார குழு விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
பத்திரிகை சுதந்திரம் என்பது எந்த ஜனநாயகத்தினதும் அடிப்படை கொள்கை என வெளிவிவகார குழு தெரிவித்துள்ளது.
அதேபோல், குற்றங்களை இழைத்தவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுதலும் முக்கியமான நடவடிக்கை என செனட் சபையின் வெளிவிவகார குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பத்திரிகையாளரின் கொலைக்காக நீதி வழங்கப்படுதலில் இருந்து தப்பித்தல் இந்த இரண்டு கொள்கைகளையும் ஆழமாக அலட்சியம் செய்யப்படுவதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகளுக்கான தனது தலைமைத்துவத்தை அமெரிக்கா மீள உறுதி செய்யவேண்டுமெனவும், ஸ்ரீலங்காவில் நீதிக்கான குரல்களுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்க வேண்மெனவும் வெளிவிவகார குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment
0 Comments