அவர் மேலும் கூறுகையில், ஈஸ்டர் தாக்குதல் எமது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஒன்றாகும். ஆனால் இந்த தாக்குதல் இடம்பெறும் காலகட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் தொடர்புகள் இருக்கவில்லை. பாதுகாப்பு தீர்மானங்கள் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டது. பாதுகாப்பு கூட்டங்களுக்கு பிரதமர் அழைக்கப்படவில்லை. எனவே இந்த தாக்குதலுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது ஆணைக்குழு மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நாம் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்தும் வருகின்றோம். எனவே ரணில் விக்ரமசிங்கவை அனாவசியமாக தண்டிக்க நாம் இடமளிக்க மாட்டோம். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக இந்த தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கூட்டணிகளை அமைத்துக்கொண்டு பரந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை உருவாக்கவுள்ளோம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துவிட்டனர். எனவே மக்களுக்கு ஜனநாயக ஆட்சியை வழங்கியாக வேண்டும். எமது கடந்தகால தவறுகளை சரிசெய்துகொண்டு பலமான அரசாங்கத்தை அமைக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியுடன் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது குறித்து இன்னமும் ஆராயவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் மாறும் வரையில் அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்போவதில்லை என்றார்.
Post a Comment
0 Comments