Type Here to Get Search Results !
--------------------------------------------------------------------------------------------

இரணைமடு குளத்திற்கு நீரை கொண்டுவரும் கனகராயன் ஆற்றில் அளவுக்கு அதிகமான மணல் அகழ்வு: உறக்கத்திலிருந்து எழுந்தார் ஆளுநர்!

இரணைமடு குளத்திற்கு நீரை கொண்டுவரும் கனகராயன் ஆற்றில் அளவுக்கு அதிகமான மணல் அகழ்வு இடம்பெற்றுவரும் நிலையில் இதனால் எதிர்காலத்தில் பாரியளவில் பாதிப்புக்கள் உருவாகும் என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் கூறியுள்ளார்.

(ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ்)

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆறுகளை பாதுகாப்போம். தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனித நாகரீகங்கள் நதிக்கரைகளிலிருந்தே தோற்றம் பெற்றுள்ளன. தற்போது இயற்கை மீது மனிதன் செலுத்துகின்ற ஆதிக்கமானது, மனித வாழ்வுக்கு ஒவ்வாத சூழலை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இன்று குடிநீருக்கான தட்டுப்பாடு இருக்கின்றது. இதேபோல் வடக்கு மாகாணத்தில் ஏனைய பிரதேசங்களிலும் இன்று குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் நதிக்கரைகளில் சுத்தமான நீரை மனிதன் பெற்றான். ஆனால் இன்று குடிநீருக்கே பாரிய பிரச்சினை எழுந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய வழங்களில் ஒன்றாக காணப்படுகின்ற இரணைமடு குளத்தின் கீழ் உள்ள கனகராயன் ஆற்றுப்பகுதியில் கீழ் தொடர்ச்சியாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது. 

 

இது எதிர்காலத்தில் நீர்த் தேக்கத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.அரச அதிகாரிகள், அரச திணைக்களங்கள், சுற்று நிருபங்களை வைத்துக்கொண்டு கூட்டங்களையும் மாநாடுகளையும் நடாத்தி பொலிஸ் இராணுவத்தினரின் பாதுகாப்பினை பயன்படுத்தியும் இதனை கட்டுப்படுத்த முடியும் என்பதை விட, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற ஒவ்வொருவரும் தங்களது எதிர்கால சந்ததினை கருத்தில் கொண்டு செயற்படுவார்கள் எனின் இவ்வாறான இயற்கை மீதான காடழிப்பு மணல் அகழ்வு என்பன இடம்பெறாது என அவர் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெறுவதுடன் சட்டத்தினால் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு சண்டியர்களாக மாறியிருக்கும் மணல் கள்ளர்கள் தொடர்பாக பொதுமக்கள் போர் நிறைவுக்கு வந்த பின்னராக கடந்த 12 வருடங்களாக போராட்டம் நடத்திவருவதுடன், பல்வேறு சந்தர்ப்பங்களில் பல தரப்புக்களிடமும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் ஒரு இடத்தில்கூட மணல் கொள்ளை நிறுத்தப்பட்டதாக இல்லை. 
பொது இடங்களில் வாள்வெட்டு சண்டையில் ஈடுபடுவதுடன், தட்டிக் கேட்பவர்களுடன் பகிரங்கமாக சண்டித்தனம் செய்யும் அளவுக்கு மணல் கடத்தல்காராகள் வடக்கில் பதாள உலக குழுக்கள்போல் மாறியிருக்கும் நிலையில் ஆளுநர் இப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டார். என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0 Comments

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big