வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராகப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு சிவில் சமூகத்தின் அழைப்புக்கிணங்க எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்குகின்றது எனக் கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு நேற்று இரவு விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ் மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அதேவேளை, திணைக்களங்கள் ரீதியான ஆக்கிரமிப்பும் தொடர்கின்றது. இதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் வடக்கு, கிழக்கில் செயற்படும் சிவில் அமைப்புக்கள் பல இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் எமது ஆதரவையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வடக்கு, கிழக்கில் உள்ள பாரம்பரிய இந்து ஆலயங்களைக் கையகப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகள் தொடர்கின்றன. அதேவேளை, முஸ்லிம் சகோதர இனத்தின் மத, கலாசார, பண்பாட்டு உரிமைகள் மீதும் அரசு கைவைத்துள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரை அரசு அச்சுறுத்தியும் வருகின்றது.
தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்களை அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது.
தமிழ்பேசும் மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் அரசு கங்கணம் கட்டிச் செயற்பட்டுக்கொண்டு வருகின்றது.
அரசின் இந்த அராஜக செயல்களைக் கண்டித்து ஜனநாயக ரீதியில் இடம்பெறும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போராட்டத்தில் தமிழ்பேசும் தரப்பினர்அனைவரும் பங்கேற்க வேண்டும் எனத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற ரீதியில் அழைப்பு விடுக்கின்றோம் என்றுள்ளது.
Post a Comment
0 Comments