தமிழ்நாட்டு பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழியை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஓர் அறமாகவே கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பாடம் கற்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழை பேச மறுக்கிற ஒரு தலைமுறை எங்கள் கண்முன்னால் நிற்பது கண்டு இதயம் நடுங்குகிறது - வைரமுத்து
இது தமிழர்களை களைக்க வைக்கும் முயற்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ள வைரமுத்து, இதுபோன்ற செயல்களை தடுக்காமல் போனால் 50 ஆண்டுகளில் தமிழ் பேச்சு மொழியாக சுருங்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 20 மாணவர்கள் விரும்பினால் தான் தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்றும், அதிலும் வாரத்தில் மூன்றே வகுப்புகள் என்றும், தமிழாசிரியர்கள் தற்காலிகமானவர்கள் எனவும் மத்திய அரசு விதிகள் வகுத்திருப்பதை பார்த்துத்தான் 'விதியே விதியே' என்ற பாரதி பாடல் எனக்குள் வினைப்பட்டது.
தமிழை எழுதவோ, படிக்கவோ தெரியாத, ஏன்? தமிழை பேச மறுக்கிற ஒரு தலைமுறை எங்கள் கண்முன்னால் நிற்பது கண்டு பனிக்காற்றின் தளிரை போல் எங்கள் இதயம் நடுங்குகிறது.
தமிழுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வருவது, தமிழர்கள் எதிர்த்த பிறகு அதனை மாற்றிக்கொள்வது என்ற நடைமுறை நல்லதல்ல. போராடும் பாம்பை கொத்தவிட்டு, கொத்தவிட்டு அது களைத்துப்போன பிறகு அதன் கழுத்தை கவ்வும் கீரியை போல தமிழர்களை களைக்க வைக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றோ என எண்ண தோன்றுகிறது.
தமிழ் படிப்போரின் எண்ணிக்கை 20க்கும் குறைவாக போவதற்கு பெற்றோர்களும் ஒரு பெருங்காரணம் என்று கவலைப்படுகிறோம். தமிழ்நாட்டு பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழியை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஓர் அறமாகவே கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், நாம் இருப்பது உள்நாட்டிலா? உகாண்டாவிலா? என்ற வெட்கம் எங்கள் தலைமுடியை இழுத்து தலையை தின்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
0 Comments