ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய இலங்கை விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், கனடா நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இந்த நியமனத்தை கனேடிய அரசு ஏற்ற பின்னரே இவர் தூதுவர் பதவியை ஏற்க முடியும். கனேடி அரசு இவரது நியமனத்தை ஏற்குமா என்ற கேள்விகள் எழுகின்றன.
ஏனெனில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வரும் கனேடிய அரசு, போரில் முக்கிய பங்காற்றிய எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், இலங்கைக்கான தூதுவராகக் கனடாவில் பணியாற்ற அனுமதிக்குமா என்ற சந்தேகம் இலங்கை அரசாங்கத்துக்கும் உண்டு.
எயார் மார்ஷல் சுமங்கல டயஸை கனடா நாட்டிற்கான தூதுவராக நியமிக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் உள்ள அரசியலமைப்புப் பேரவைக்கு இவருடைய பெயர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேறு நாடுகளிலும் இலங்கைக்கான தூதுவர்களாக பணியாற்றுவதற்காக எட்டுப் போரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உயர் அதகாரிகள் மற்றும் வெளிநாட்டில் பணியாற்றும் இராஜதந்திரிகளுடைய நியமனங்களை சுயாதீன அரசியலமைப்புப் பேரவையே நியமிப்பது வழமை. அந்தச் சுயாதீனப் பேரவையில் பாராளுமன்ற உறுப்பினர்களோடு சிவில் சமூகப் பிரநிதிகளும் அங்கம் வகிப்பர்.
ஆனால் 20ஆவது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்த பின்னர், சுயாதீன அரசியலமைப்புப் பேரவையில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அங்கம் வகிக்க முடியாது. அத்துடன் அந்த நியமனங்களில் ஜனாதிபதியும் தலையிட முடியும்.
இதனால் கனடா நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸின் பெயரை ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார். அதனை பாராளுமன்றத்தில் உள்ள சுயாதீனக்குழுவும் ஏற்றுக்கொள்ளும் நிலைமை உண்டு.
ஆனால் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் 57,58,59ஆவது படைப் பிரிவுகளுடன் இணைந்து அந்தப் படைப்பரிவின் தரைத் தாக்குதல் நடவடிக்கைகளுக்குத் தேவையான விமானத் தாக்குதல்களை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் கடமையாற்றியிருந்தார். அந்தத் தாக்குதல்களில் பொது மக்கள் பலரும் உயிரிழந்தனர்.
இது தொடர்பான பதிவுகள் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்த ஆவணங்களில் உள்ளன. கனேடிய அரசும் அவ்வப்போது இலங்கைப் படையினரின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டிருந்தன. ஜெனிவா மனித உரிமைச் சபையிலும் அதன் பிரதிபலிப்புகள் தெரிந்தன.
இவ்வாறானதொரு நிலையில் எந்த அடிப்படையில் கனேடிய அரசு இவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ளும் என்ற கேள்விகள் எழாமலில்லை.
1995ஆம் ஆண்டு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்திருந்த சந்திரானந்த டி சில்வாவை, சந்திரிகா அரசாங்கம் கனடா நாட்டுக்கான தூதுவராக நியமித்தபோது அதனை அப்போதிருந்த கனேடிய அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இலங்கை இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பலகல்ல கனடாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டபோதும், அதனையும் அப்போதிருந்த கனேடிய அரசு நிராகரித்திருந்தது.
ஆகவே போர்க்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான எயார் மார்ஷல் சுமங்கல டயஸின் நியமனத்தை கனேடிய அரசு ஏற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் இல்லையென்றே தெரிகிறது.
எவ்வாறாயினும் கனடாவுக்கான தூதுவர் நியமனம் தொடர்பாக இதுவரை இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. பாராளுமன்றக் குழுவுக்குப் பரிந்துரை மாத்திரமே செய்யப்பட்டுள்ளது.
Source: Samugam Media
Post a Comment
0 Comments