ஈரானின் அணுவாயுத திட்டங்களின் தலைவர் என கருதப்படும் ஈரானின் விஞ்ஞானியொருவர் இனந்தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மொஹ்சென் பக்ரிசாதே என்ற ஈரானின் அணுவிஞ்ஞானி கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரானின் பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது.பேராசிரியரும் ஈரானின் புரட்சிகர இராணுவத்தின் முக்கிய உறுப்பினருமான மொஹ்சென் பக்ரிசாதே கொல்லப்பட்டுள்ளார் என ஈரானின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரான் தலைநகருக்கு அருகில் அவரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் கொல்லப்பட்டுள்ளனர் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் தலைநகருக்கு அருகில் உள்ள அப்சார்ட் என்ற நகரில் அவர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குண்டுவெடிப்பு சத்தமும் துப்பாக்கி பிரயோகமும் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார் ஒன்றே இலக்கு வைக்கப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு படையினர் வீதிகளை மறிப்பதை ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது.
மதியம் ஈரானின் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளிற்காக அமைப்பின் தலைவர் மொஹ்சென் பக்ரிசாதே பயணம் செய்த காரின் மீது ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் தாக்குதலை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள ஈரானின் பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளிற்கும் இடையிலான மோதலின் போது மொஹ்சென் பக்ரிசாதே காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் அவரை காப்பாற்றுவதற்கான மருத்துவ குழுவின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகள் காரின் மீது குண்டுதாக்குதலை மேற்கொண்ட பின்னர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் ஆன்மீக தலைவரின் ஆலோசகர் ஹொசெய்ன் டெகான் என்பவர் இது இஸ்ரேலின் செயல் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
சியோனிஸ்ட்கள் அவர்களது சூதாட்ட சகாவின் அரசியல் வாழ்க்கையின் இறுதி நாட்களில், முழுமையான யுத்தமொன்றை ஈரான் மீது திணிப்பதற்காக ஈரான் மீது அழுத்தங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment
0 Comments