Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ **************************************************** ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ---------------------------------------------------------------------------------

    SOORIYAN TV(#Tamil)

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      ---------------------------------------------------------------------------------

      Bottom Ad

      15 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் – இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்: இந்தியா விலகல்!

      சீனா முன் அமெரிக்கா தோல்வி! 15 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் – இந்தியா விலகல்; இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்.

      மெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள நிலையில், ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு (Regional Comprehensive Economic Partnership) (RCEP) ஒப்பந்தத்தில் 15 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. உலகின் 39சதவீத பொருளாதார கட்டமைப்புகளை இந்த நாடுகள் உள்ளடக்கியுள்ளதால் உலகின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தமாக மலேமெயில் என்ற மலேசிய ஊடகம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

      ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் பத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. உலகளாவிய மக்கள் தொகையில் ஏறத்தாள மூன்றில் ஒரு பகுதியையும் அதன் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30சதவீதத்தை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது.

      இந்த ஒப்பந்தம் வர்த்தக ஊக்குவிப்பு என்ற போர்வையில், படிப்படியாக கட்டணங்களை குறைக்கும், இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு வாதத்தை எதிர்த்து முதலீட்டை அதிகரிக்கும், பிராந்தியத்திற்குள் பொருட்களின் சுதந்திரமான இயக்கத்தை அனுமதிப்பது போன்ற செயற்பாடுகளே இந்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமென நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

      2011 ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின் பொருளாதார அமைச்சர்கள் சீன மற்றும் ஜப்பானிய கூட்டுத் தொடர்பான பொருளாதார வழிமுறைகள் குறித்த விரிவான பேச்சு ஒன்றைத் தொடக்கி வைத்தனர். அதன் தொடர்ச்சியாகவே 2012ஆம் ஆண்டு கம்போடியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் RCEP எனப்படும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஒப்பந்தத்திற்கான முதற்கட்ட பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டன. எட்டு ஆண்டுகளின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை 15 நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன.

      கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக வியட்னாம் தலைநகரில் வீடியோவில் நடத்தப்பட்ட மாநாட்டின் மூலமாக (Video Conference) இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 15 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த நிபுணர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். 2012ஆம் ஆண்டில் இருந்து 29 கூட்டங்கள் நடத்தப்பட்டு, இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது. 29ஆவது கூட்டமே கோவிட் 19 நோய் பரவல் காரணமாக வீடியோ மாநாடாக நடைபெற்றது.

      சென்ற ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை வீடியோ மாநாடாக நடைபெற்றது. பின்னர் மே மாதம் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை வீடியோ மாநாடாக நடைபெற்றது. இதன் போது உடன்பட்டுக் கொண்ட விடயங்கள் அறிக்கைகளாகத் தயரிக்கப்பட்டு 15 நாடுகளும் இணக்கம் தெரிவித்த பின்னர், மீண்டும் யூன் மாதம் ஒப்பந்தம் பற்றிய மதிப்பீட்டு மாநாடு நடத்தப்பட்டது. ஓகஸ்ட் 27ஆம் திகதியும் மற்றுமொரு மீளாய்வு வீடியோ மாநாடு நடத்தப்பட்டது. அதன் பின்னரே நேற்று 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 15 நாடுகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

      ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திடவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற்ற இந்த ஒப்பந்தம் தொடர்பான 28ஆவது கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திரமோடி, இந்தியா தொடர்பாக முக்கியமான சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். ஆனால் அது பரிசீலிக்கப்படவில்லை. இதனாலேயே இந்த ஒப்பந்த்தில் கைச்சாத்திட முடியாதென இந்திய உட்துறை அமைச்சர் அமீத் ஷா தெரிவித்தார்.

      இந்த ஒப்பந்தம் அதன் உண்மை நோக்கத்தைப் பிரதிபலிக்கவில்லை, இதன் விளைவு நியாயமானதாகவோ அல்லது சீரானதாகவோ இல்லை. இதில் இறக்குமதி உயர்வுக்கு எதிரான போதிய பாதுகாப்பு, சீனாவுடனான போதிய வேறுபாடு, அடிப்படை விதிகளை மீறுதல், சந்தையை அணுகுதல் மற்றும் கட்டணமில்லா தடைகள் குறித்து நம்பகமான உத்தரவாதங்கள் இல்லாதது போன்ற முக்கிய பிரச்னைகள் இருப்பதாக அமீத் ஷா புதுடில்லியில் நேற்று ஞாயிற்றுகிழமை மாலை செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

      ஆனால் இந்தக் கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் இணைய இந்தியாவுக்காகக் கதவுகள் திறந்தே இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இணைவது குறித்து பரிசீலிக்கவே முடியாதென இந்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா புதுடில்லியில் செய்தியாளர்களிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தம் தொடர்பான ஐந்தாவது மாநாடு புதுடில்லியில் நடைபெற்றபோதே இந்திய நிலைப்பாடுகள் குறித்தும், சீனாவிடம் இருந்து வரக்கூடிய பாதுகாப்பற்ற தன்மைகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டதென்றும், ஆனாலும் இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் அதற்கு உரிய பதில் தரவில்லை என்றும், அவர் கவலை வெளியிட்டார்.

      உலகப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கிய பதினைந்து நாடுகள் உலகின் மிகப்பெரிய வர்த்தக முகாமை ஒன்றை உருவாக்கியுள்ளன. இந்த ஒப்பந்தம் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கின் விரிவாக்கமாகக் கருதப்படுகிறது. டொனால்ட் ட்ரம், அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் 2017ஆம் ஆண்டு 12 நாடுகளை உள்ளட்கிய ஆசிய -பசுபிக் கூட்டாண்மை வர்த்தக ஒப்பந்ததில் இருந்து அமெரிக்காவை விலக்கினார். ஆனால் பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, இந்த ஒப்பந்தத்தில் இணைந்து அதன் மூலமாக சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பியிருந்தார்.

      எனினும் டொனால்ட் ட்ரம் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால், ஆசிய- பசுபிக் கூட்டாண்மை வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா கூடுதலாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.

      இந்தவொரு நிலையிலேயே 15 நாடுகள் உள்ளிட்ட பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை, இந்தோ- பசுபிக் பிரந்தியத்தில், பொருளாதார ரீதியாக சீனாவின் பலம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே அவதானிகள் கருதுகின்றனர்.

      இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானமை, மேகங்களுக்கு மத்தியில் ஒளியையும் நம்பிக்கையையும் தருவதாக அமைந்துள்ளதென சீனப் பிரதமர் லி கெக்கியாங் கூறினார். திரு லி இந்த ஒப்பந்தத்தை பலதரப்பு மற்றும் சுதந்திர வர்த்தகத்தின் வெற்றி என்றும் வர்ணிக்கிறார்.

      ஆரம்பத்தில் இந்தியாவும் இந்த ஒப்பந்தத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியிருந்தது. ஆனால் ஒப்பந்தத்தின் பிரகாரம் குறைந்த கட்டணங்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்தியா வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் இந்திய முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டதன் காரணமாகவே, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் வெளியேறியதாக இந்திய உள்துறை அமைச்சு காரணம் கற்பிக்கின்றது.

      இருந்தாலும் இந்தியாவின் காரணத்தை ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளே ஏற்கவில்லையென என்பிசி செய்திச் சேவை கூறுகின்றது. உலக பொருளாதாரத்தில் 49.5 டிரில்லியன் டாலர் இந்த ஒப்பந்த்தில் கைச்சாத்திட்ட 15 நாடுகளிடம் இருப்பதால், மிகப்பெரும் சக்தி வாய்ந்த குழுவாக RCEP எனப்படும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

      ஆனால் இந்தியா இதில் இணைந்தால் மாத்திரமே அது சாத்தியமாகுனெ ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை அவுஸ்திரேலியா இந்த ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டதை சீனா வரவேற்றுள்ளது. 15 நாடுகளுக்கிடையிலான ஆசிய- பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் சீனாவோடு உறவை வலுப்படுத்த உதவும் என அவுஸ்ரேலியாவின் வர்த்தக அமைச்சர் சைமன் பர்மிங்கம் தெரிவித்துள்ளார். ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் கையெழுத்திட்டுள்ள சீனா ஆதரவு பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தம் என்று சீன ஊடகங்கள் வர்ணித்துள்ளன.

      உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாக இது மாறக்கூடும் எனவும் சீன ஊடகங்கள் விபரித்துள்ளன.

      RCEP எனப்டும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஒப்பந்தத்துடன் ஒப்பிடும்போது தற்போதுள்ள நாடுகளுக்கிடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை (Free Trade Agreement) (FTA) எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து ஆசிய வர்த்தக மையத்தைச் சேர்ந்த டெபோரா எல்ம்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

      உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைக் கொண்ட வணிகங்கள் ஒரு FTA க்குள் கூட கட்டணங்களை எதிர்கொள்ளக்கூடும், ஏனெனில் அவற்றின் தயாரிப்புகளில் வேறு இடங்களில் தயாரிக்கப்படும் கூறுகள் உள்ளன. உதாரணமாக, இந்தோனேசியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு தயாரிப்புக்குப் பதிலாக , ஆஸ்திரேலிய பாகங்கள் உள்ளன, ஆசிய சுதந்திர வர்த்தக வலயத்தில் வேறு எங்கும் கட்டணங்களை எதிர்கொள்ளக்கூடும். RCEP எனப்படும் ஒப்பந்தத்தின் கீழ், எந்தவொரு உறுப்பு நாடுகளிடமிருந்தும் பாகங்கள் சமமாகவே கருதப்படும். ஆகவே இவை சிக்கலானது என்று அவர் வாதிடுகிறார். இந்தியா கைச்சாத்திட மறுத்தமைக்கான காரணத்தை அவர் நியாயப்படுத்துகின்றார் போலும்.

      இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த குவாட் எனப்படும் வலையமைப்புக்குள் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து கூட்டுக் கடற்படை பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், குவாட்டில் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை அமெரிக்க இந்திய நலன்களுக்குப் பாதகமானதென்றே கருதப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்க இராஜதந்திரத்திற்கு இது ஏமாற்றமாகவே அவதானிக்கப்படுகிறது.

      அதேவேளை, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை மையப்படுத்திய சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்கும் இது வலு சேர்க்கிறது. இந்த இடத்தில் அமெரிக்காவோடு சேர்ந்து நிற்கும் இந்தியா, ஜோ பைடன் நிர்வாகம் வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இந்தியத் தொழில் அதிபர்கள் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இந்த நகர்வுகள் எல்லாமே இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் செல்லப்பிள்ளை போன்று இருக்கும் இலங்கைக்கு எந்தப் பக்கம் திருப்பினாலும் சிவீப் ரிக்கற் விழுந்ததுபோன்ற உணர்வுதான்.

      Post a Comment

      0 Comments