2ம் உலகப் போர் எவ்வாறு இன்றைய உலக ஒழுங்கை கட்டமைப்பு செய்ததோ அவ்வாறே கொரோனா என்கின்ற உயிர்க்கொல்லி நோய் இந்த உலக ஒழுங்கை கொரோனாவுக்கு பின்னா உலக ஒழுங்காக கட்டமைப்புச் செய்யப் போகின்றது.
கொரோனாவுக்கு பின்னான உலக ஒழுங்கின் முதல் காலடி எடுத்து வைப்பாக அமெரிக்காவின் இரண்டாவது அதிகாரம் படைத்த பதவி வகிக்கக்கூடிய அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் (United states Secretary of State) மைக் கொம்பியோ (Mike Pompeo) இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கு இன்றைய நெருக்கடியான சூழலில் ராஜரீக பயணத்தை மேற்கொள்வது என்பது இந்தப் பிராந்தியத்தில் உள்ள அரசியல் பொருளியல் அதிகாரப் போட்டியின் கொதிநிலையின் உச்சத்தை வெளிப்படுகிறது.
அமெரிக்காவின் ‘‘இந்தோ — பசுபிக் பிராந்திய” அரசியல் புவியியல் ( Political Geogaphy) நல்லனும் இந்தியாவினுடைய “புவிசார் அரசியல் (Geopolitics) நலனும்” இணைதிருக்கின்ற ஒரு சந்தியில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற பயணமாகத்தான் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் இலங்கை பயணம் அமைகின்றது.
இற்றை வரையான காலத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் கேந்திரத் தன்மையையும், இந்தியப் பாதுகாப்பு சார்ந்த இந்தியாவின் புவிசார் அரசியலையும், அகன்ற இந்து சமுத்திரம் சார்ந்த வகையில் இந்தியாவின் அரசியல் – பொருளியல் – இராணுவ நலனையும் இந்தியாவால் ஓரளவு கையாளக் கூடியதாக இருந்தது.
ஆனால் இந்நிலைமையை இன்று சீனா உருவாக்கியிருக்கும் புதிய அரசியல் புவியியல் (Political Geography) மாற்றியமைத்துவிட்டது. இந்தியாவின் கையை மீறி சீனாவின் அரசியல் புவியியல் இந்து சமுத்திரத்தில் நுழைந்துவிட்ட நிலையில் இந்தியா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தன்னை பலப்படுத்த அமெரிக்க வல்லரசுடன் கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தோன்றியுள்ளது.
உலக அரசியல் போக்கில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் புவிசார் அரசியலில் இருந்து தங்களைப் பாதுகாக்க முடியாத நிலமை ஏற்படுகின்றபோது இயற்கையாக இருக்கின்ற அமைப்புக்களோடும் நிகழ்வுகளோடும் கூடவே தமது தேவைக்கேற்ப செயற்கையான மாற்றங்களை அரசியல் ரீதியாக புவியியல் அமைப்பின் மீது உருவாக்கி தமக்கான நலன்களை இலக்கு வைப்பதையே அரசியல் புவியியல் என்கிறோம்.
இயற்கையான புவியியல் அமைப்பின்படி சீனா ஒரு இந்து சமுத்திர நாடல்ல. அவ்வாறு இயற்கையாக இந்து சமுத்திரத்தில் ஒரு நாடாக அமையாத சீனா தற்போது அரசியல் புவியியல் மீது அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் மாற்றத்துக்கு ஏற்ப இன்று அது தன்னை ஒரு இந்து சமுத்திரப் பிராந்திய நாட்டுக்குரிய நிலைக்கு உரியதாக்கி வருகிறது.
அதாவது இந்து சமுத்திரத்தில் அமைந்திருக்கும் பாகிஸ்தானிலுள்ள குவாதர் துறைமுகத்தையும் மற்றும் மியன்மாரில் அமைந்திருக்கும் கோகோதீவுகளையும் இலங்கைத்தீவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் சீனா தனது பிடிக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் இந்து சமுத்திரத்தின் பின்தள நாடாக சீனா இன்று தன்னை ஆகிக்கொண்டுவிட்டது.
அம்பாந்தோட்டை துறைமுகம்
அது எப்படியெனில் இயற்கையான புவியியல் அமைப்பினால் சீனா ஒரு இந்து சமுத்திர நாடல்லாத நிலையில் இந்து சமுத்திர நாடான பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகத்தோடு சீனாவை இணைக்கும் வகையில் சீனாவில் இருந்து நேரடியாக பெருந்தெரு ஒன்றை அமைத்து அது சமுத்திரத்துள் நுளைக்கிறது. அவ்வாறு மியான்மாரின் கோகோ தீவிலிருந்து நிலக்கீழ் வழியாக எண்ணெய் குழாய்களை அமைத்து சீனாவுக்கு நேரடியாக எண்ணெய் விநியோகத்தை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. சீனாவின் இவ்விரு அரசியல் பொருளியற் செயற்பாடுகளும் இந்தியாவின் புவிசார் அரசியலை புறந்தள்ளி சீனாவுக்கான புதிய அரசியல்ப் புவியியல் சூழலை உருவாக்கி இந்து சமுத்திரத்தில் சீனா ஆளுகை செய்ய தொடங்கிவிட்டது.
அத்தோடு இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு பெற்றுக் கொண்டதோடு கொழும்பில் கடல் நகரம் ஒன்றியம் மிகப் பிரமாண்டமான அளவில் சீனா மேற்கொண்டு வருகிறது. இங்கே குவாதர் – அம்பாந்தோட்டை – கொக்கோ தீவுகள் என்ற மூன்று புள்ளிகளை இணைத்து அமைக்கப்படும் வலையமைப்பு இந்து சமுத்திரத்தில் இந்தியாவை வளைப்பதாய் காணப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவை முற்றுகைக்குள் வைக்கக்கூடியதான இராணுவப் பலம்வாய்ந்த ஒரு புதிய அரசியற் புவியியலை சீனா தோற்றுவித்திருக்கிறது.
கொழும்பில் உருவாகும் துறைமுக நகரம்
சீனா தனது அரசியல் பொருளாதார பலத்தின் மூலம் சேர்க்கையாக உருவாக்கியிருக்கும் இந்து சமுத்திர அரசியற் புவியியல் முற்றுகையை உடைத்து இந்து சமுத்திரத்தில் இந்தியா தனது இராணுவ கேந்திர புவிசார் நலனையும் பரந்த இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் நலனையும் தக்கவைக்க வேண்டுமென்றால் அமெரிக்காவின் இந்தோ பசுபிக் பிராந்திய அரசியல் நலனை அனுசரித்து கூட்டு இணைந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்ற நிலை உருவாகி உள்ளது.
இந்தப் பின்னணியிற்தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் இந்தியாவிற்காகவும் பேசவருகிறார் என்பது புலனாகும். அதாவது இலங்கை விடயத்தில் இந்திய அரசு பேச முற்படும் விடயங்களை சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் இந்திய எதிர்ப்பு வாதத்தினால் இலகுவாக எதிர்கொண்டுவிடுவர். இந்நிலையில் அமெரிக்காவுக்கு ஊடாக தனது நிலையை இலங்கையில் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இந்திய ஆட்சியாளர்களுக்கு உண்டெனத் தெரிகிறது.
பண்டைய நாட்களில் கிமு இரண்டாம் நூற்றாண்டில் சீனாவை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 21 , 196 கி மீ. நீளமான சீனப்பெருஞ்சுவர் ஒரு அரசியல் புவியியல் ஏற்பாடாகும் . பனாமா கால்வாய், சுயஸ் கால்வாய், இன்று அமெரிக்கா கட்ட முனையும் மெக்சிகோ சுவர், இந்தோ — பசுபிக் பிராந்தியம், இலங்கையில் கிழக்கு மாகாணம் மற்றும் மணலாறு ஆகிய பகுதிகளுக்கான சிங்களக் குடியேற்றம் என்பனவெல்லாம் அரசியல் புவியியல் என்கின் விளக்கத்துக்குள் உள்ளடக்கப்பட கூடியவை.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் மைக் போம்பியோ
அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் இந்தோ — பசிபிக் பிராந்திய நாடுகளான மாலைதீவு , இந்தோனேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு இன்றைய காலத்தில் பயணம் செய்வது என்பதை ஈழத் தமிழர் கூர்ந்து கவனித்து செயற்பட தயாராக வேண்டும். இந்து சமுத்திரத்தில் நிகழப்போகும் மாற்றங்களுக்கான கட்டியம் கூறலாகவே இதனை நோக்கவேண்டும்.
இன்று 27 ஆம் திகதியும் நாளையும் இலங்கைக்கு ராஜாங்க விஜயத்தை மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் பயணம் மற்றும் அமெரிக்காவின் விருப்பிற்கு எதிராக இலங்கை வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் பல்வேறு வகைப்பட்ட கருத்துக்களை முன் கூட்டியே கூறத் தொடங்கிவிட்டனர்.
அமெரிக்க அமைச்சரின் பயணத்தின் நோக்கம் சீனாவை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருந்து ஓரம் கட்டுவதற்கான செயற்திட்டம் என்பதனை இலங்கை அரசு புரிந்து கொண்டிருக்கிறது. தற்போது சீனாவை இலங்கை கைவிடத் தயாரில்லை. அதே நேரத்தில் இந்தியாவை அணைக்கவும் அது உண்மையில் உள்ளார்ந்த அர்த்தத்தில் தயார் இல்லை.
ஏனெனில் இற்றை வரையான காலத்தில் இலங்கையில் இருந்து வந்த இந்தியாவினது புவிசார் அரசியலின் மேலாண்மை தற்போது கீழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அது எப்படியெனில்,
- இலங்கையின் வடகிழக்கில் உள்ள தமிழர்களே இந்தியாவின் பலம். அந்தப் பலத்தை கிழக்கில் மேற்கொள்ளும் சிங்கள குடியேற்றங்களின் மூலம் நிலத்தை கபளீகரம் செய்து விட்டது.
- அடுத்து வடக்கின் எல்லையோரப் பகுதிகளை புதிய குடியேற்றங்கள் மூலம் கபளீகரம் செய்ய தொடங்கிவிட்டது.
- ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தையும் படு மோசமாக இனப் படுகொலை செய்து தோற்கடித்து விட்டது.
- சீனா உருவாகியிருக்கும் குவாதர்- அம்பாந்தோட்டை- கோக்கோ தீவுகள் ஆகியவற்றை இணைத்து இந்தியாவை முற்றுகைக்கு உள்ளாகியுள்ள சீனாவின் புதிய அரசியல் புவியியல் வியூகமானது இலங்கைக்கு புதிய தெம்பையும் உற்சாகத்தையும் கொடுத்து இருக்கிறது. இப்பின்னணியிற்தான் இன்றைய இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவையும் அமெரிக்காவையும் எதிர்த்து துணிச்சலாக கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கிவிட்டனர்.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தை பயன்படுத்தி இலங்கையில் சீனா ஆழமாக வேரூன்றிவிட்டது. இந்த யுத்தத்தில் ராஜபக்ஷக்களுக்கு உறுதுணையாக நின்று இனப்படுகொலையின் வாயிலாக ராஜபக்சக்ளைப் பலப்படுத்தி அதன் மூலம் இலங்கையை சீனச் சார்பு நிலைப்பாட்டிற்கு சீனாவால் இட்டுச்செல்ல முடிந்தது.
இதன் மூலம் ராஜபக்சக்கள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் வலுவான காலூன்றலூக்கும் வழியமைத்து விட்டவர்கள் .
இன்றைய சூழமைவில் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் முகப்பில் வளமான கேந்திரத்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் வாழ்வதனால் அவர்களும் ஒரு முக்கிய புவிசார் அரசியல் சக்தியாக உள்ளனர் . இதுதான் ஈழத் தமிழர்களுக்கு இருக்கக்கூடிய இறுதிப் பலமாகும்.
மொத்தத்தில் கடந்த காலப் படிப்பினைகளுக்கூடாக முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் வளர்ச்சியடைந்த சீன — சிங்கள — ராஜபக்சக்கள் உறவு தற்போது தமிழின அழிப்பை நோக்கி பெரு விருட்சமாக மேலும் வளர்ந்து இருக்கும் நிலையில் தமிழ் மக்கள் தம்மைக் தற்காப்பதற்கான குறைந்தபட்ச இடைவெளியை சரிவரப் புரிந்து கையிலெடுக்க வேண்டும்.
இந்நிலையில் சீன– சிங்கள உறவு ஒருபக்கமும் இந்திய — அமெரிக்க உறவு இன்னொரு பக்கமும் இருக்கும் இரு முனைகள் கொண்ட முரண்பாட்டின் மத்தியில் தற்போது தமிழ் மக்களுக்கு சாதமாக காணப்படும் வாய்ப்புகளை சரிவர பயன்படுத்த தமிழ் தலைவர்கள் தயாராக வேண்டும்.
மைக் போட்பியோ புதுடில்லி வந்திறங்கிய போது..
தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உண்டு என்பதை இக்கட்டத்தில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சரிடம் ஈழத் தமிழ்த் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும். ஈழத் தமிழர் விவகாரம் இத்தகைய சந்திப்புகளின் போது முக்கியமான விவகாரங்களில் ஒன்றாக எடுத்து பேசப்பட வேண்டும் என்பதை இந்திய-அமெரிக்க தரப்புக்கு ஈழத் தமிழர்கள் தெரிவிக்க வேண்டும்.
இந்த வகையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தை ஈழத் தமிழர்கள் தமக்கு அப்பாலான ஏதோ ஒரு பிறத்தி விவகாரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
தி. திபாகரன்(தினக்குரல்)
நன்றி: தினக்குரல்
Post a Comment
0 Comments