நியூசிலாந்து நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து அந்த நாடு முழுவதும் பொது முடக்கத்தை அறிவித்திருக்கிறது அந்நாட்டு அரசு.
அங்குள்ள ஆக்லாந்தில் ஒரு வாரத்துக்கு பொதுமுடக்கமும், நாட்டின் பிற பகுதிகளில் மூன்று நாட்களுக்கு பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதிப்பு டெல்டா திரிபு தானா என்பதை கண்டறிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக நியூசிலாந்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நியூசிலாந்து நாட்டில் 20 சதவீத மக்கள்தொகைக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
அங்குள்ள கோரமண்டல் என்ற கடலோர நகருக்கு கொரோனா பாதித்த நபர் வந்திருக்கிறார். இதனால், அந்த நகரில் ஒரு வாரத்துக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு தொலைக்காட்சியில் நியூலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் உரையாற்றினார். அப்போது அவர், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நான்காம் நிலை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் மூடப்படும். வெறும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் என்று கூறினார்.
"இதுபோன்ற நிகழ்வு வரலாம் என ஏற்கெனவே நாம் திட்டமிட்டிருந்தோம். முன்கூட்டியே கடுமையாக நடவடிக்கை எடுப்பது நமக்கு முன்பு பயன் கொடுத்துள்ளது என்ற உறுதியை உங்களுக்கு தருகிறேன்," என்று ஜெசிண்டா கூறினார்.
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நபரின் வயது 58. அவருக்கு பாதிப்பு அறிகுறி கடந்த வியாழக்கிழமை தெரிய வந்தது. அவர் மூலமாக மேலும் 23 பேருக்கு வைரஸ் பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 'தடமறிதல் பரிசோதனை' மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஆக்லாந்தில் பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் என்று ஏற்கெனவே ஊகித்திருந்த மக்கள், பொருட்களை வாங்க பல்பொருள் அங்காடிகளுக்கும் காய்கறி சந்தைகளுக்கும் சென்றதால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. எனினும், புதிய பாதிப்புக்கும் எல்லையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் உள்ளவர்களுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக கடந்த திங்கட்கிழமை நியூசிலாந்து அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி அங்கு நாட்டின் எல்லை பகுதியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பலருக்கும் டெல்டா திரிபு வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது.
"இப்போது இங்கு நடப்பது வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அது தீவிரமாகும் முன்பு நாம் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். நமக்கு ஒரேயொரு வாய்ப்பு மட்டுமே உள்ளது," என்று இந்த பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையின்போது பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் தெரிவித்தார்.
நியூசிலாந்து நாட்டில் அதன் எல்லைக்குட்பட்ட இடங்களில் கொரோனா வைரஸை முழுமையாக விரட்டியடிப்பதில் அந்நாட்டு அரசு வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும் அதன் சர்வதேச எல்லைகள் திறந்தே இருந்தன.
எனினும், கொரோனா தடுப்பூசிபோடும் பணிகள் அங்கு மிகவும் தொய்வான போக்கிலேயே நடந்தன. மொத்த மக்கள்தொகையில் 20 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியை போட்டிருக்கிறார்கள். 33 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ் மருந்து மட்டுமே போடப்பட்டுள்ளது என்கிறது ஓர் சர்வதேச தரவு.
Source: BBC Tamil
Social Plugin
Social Plugin