பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி நல்லா இருக்குற குடும்பங்களை கெடுத்து வருகிறார் கமல் என்று முதல்வர் பழனிச்சாமி கடுமையாக தாக்கியுள்ளார். அந்த நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கெட்டுத்தான் போவார்கள். ஒரு குடும்பமும் உருப்படாது என்றும் தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்று கடந்த ஒரு வாரமாக தொடர் பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார். மதுரையில் தொடங்கி தென்மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் அதிமுக ஆட்சியை கடுமையாக சாடி பேசினார்.எம்.ஜி.ஆரின் நீட்சி, எம்.ஜி.ஆரின் வாரிசு என்றும் சொல்லி பேசியதோடு, தான் எம்ஜிஆர் மடியில் தவழ்ந்தவன் என்றும் பேசி அதிமுக தொண்டர்களை கவர முயற்சி செய்தார். கமல் கருத்துக்கு அமைச்சர்கள் பலரும் பதில் கொடுத்துள்ளனர்.
முதல்வர் பேச்சு
அரியலூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.36.73 கோடி மதிப்பில் முடிவுற்ற 39 பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். ரூ.26.52 கோடி மதிப்பில் 14 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வர் பழனிச்சாமி, கமல்ஹாசனை கடுமையாக சாடினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, கமல்ஹாசன் என்ன நல்லது செய்திருக்கிறார். 70 வயதில் பிக்பாஸ் நடத்துகிறார் கமல். அந்த நிகழ்ச்சியை நடத்துகிறவர் அரசியலுக்கு வந்தால் சரியாக இருக்குமா?என்று கேள்வி எழுப்பினார்.
குடும்பம் உருப்படுமா
நாட்டுக்கு நல்லது செய்ய கமல் வரவில்லை. நல்லா இருக்குற குடும்பங்களை கெடுத்து வருகிறார் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கெட்டுத்தான் போவார்கள். ஒரு குடும்பமும் உருப்படாது என்றும் சொன்னார் முதல்வர் பழனிச்சாமி.
படத்தில் நல்ல கருத்துக்கள்
எம்.ஜி.ஆர். பட பாடல்களில் எத்தனை நல்ல கருத்துக்கள் இருக்கின்றன. மக்களுக்காக படங்களிலும் பாடல்களிலும் அவர் நிறைய நல்ல கருத்துக்களை கூறியிருக்கிறார். கமல்ஹாசன் படத்தில் அப்படி ஏதாவது நல்ல கருத்துக்கள் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார் முதல்வர் பழனிச்சாமி. மக்களுக்காக அதிமுக ஆட்சியில் நிறைய நல்லது செய்திருக்கிறோம். நல்ல கேள்விகளைக் கேளுங்கள் அதை விட்டு விட்டு கமல் பற்றி கேட்கலாமா என்றும் கூறினார் முதல்வர் பழனிச்சாமி.
Social Plugin
Social Plugin