கொரோனா தொற்றுநோய் உண்மையில் ஏமாற்றமளிக்கிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேதனை தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கனடா 30 ஆவது இடத்தில் உள்ளது. அங்கு 2 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது.
இந்நிலையில் கொரோனா தீவிரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ, “கனடாவில் கொரோனா பலி எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது, மேலும் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா தொற்று நோய் பரவல் உண்மையிலேயே ஏமாற்றமளிக்கிறது.
2020 இவ்வாறு இருக்க வேண்டும் என்று யாரும் விரும்பவில்லை, ஆனால் ஓவ்வொருவரும் அவரவர் கடமையை செய்து நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த வேண்டும். இனிவரும் காலம் அதாவது குளிர்காலம் மிகவும் சவாலானது. அப்போது நோய் தொற்று வேகமாக பரவும். எனவே அது கடுமையான காலம்.
மக்கள் உத்வேகத்துடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.இல்லையென்றால், விடுமுறை கொண்டாட்டங்கள் தடைபடக்கூடும். நாம் உண்மையிலேயே, மிகவும் கவனமாக இல்லாவிட்டால், கிறிஸ்மஸில் நாம் விரும்பும் வகையில் குடும்பங்களுடன் ஒன்றுக்கூட முடியாது. ஊரடங்கால் மக்கள் மத்தியில் விரக்தி ஏற்பட்டுள்ளது.
நிச்சயம் கனடா இதுபோன்ற கொடூரமான காலத்தை கடந்து செல்லும் என நம்புகிறேன். நம் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கும் நாட்கள் விரைவில் வரும்” என தெரிவித்தார்.
Social Plugin
Social Plugin