ரஷ்யாவுக்கு எதிராக அண்மையில் புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் இராணுவத்தின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் வலிமையான ராணுவத்தை வைத்துள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கே குடைச்சல் கொடுத்த பிரிகோஜின் யார்?
உலகின் மிக வலிமையான ராணுவப் படையை கொண்டிருக்கும் நாடு ரஷ்யா. அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களை கொண்டுள்ள அமெரிக்காவுக்கே சவால் விடுக்கும் ரஷ்யா ராணுவத்திற்கே ஒரு தனியார் கூலிப்படை சிம்ம சொப்பனமாக திகழ்கிறது என்றால் அதுதான் வாக்னர் படை.
ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப்படை கடந்த ஜூன் மாதம் அதன் சொந்த நாட்டு ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வாக்னர் கூலிப்படையினர், சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்தனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பெலாரஸ் அதிபர் தலையிட்டு, பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்தினார். இதையடுத்து, வாக்னர் படைகள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கே தலைவலி கொடுத்தது இந்தச் சம்பவம். ஒரே நாளில், நாட்டின் பல பகுதிகளிலும் சாவுக்கு அஞ்சாத வாக்னர் படையினர் இறங்கியதால் ரஷ்யாவும் அதன் அண்டை நாடுகளும் பதறின. அப்படிப்பட்ட வாக்னர் கூலிப்படையின் தலைவர் தான் எவ்ஜெனி பிரிகோஜின்.
1980களில் திருட்டு வழக்குகளில் நீண்ட சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு, பிரிகோஜின் தனது சொந்த ஊரான செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் உணவகம் தொடங்கினார். இதை தொடர்ந்து, உணவு வர்த்தகத்தில் தவிர்க்க முடியாத ஆளாக மாறினார். பெரிய அளவில் கேட்டரிங் நிறுவனத்தையும் திறந்தார். சிறப்பான உணவு வகைகளை வழங்கி புகழ்பெற தொடங்கிய இவரது உணவகத்தை தேடி விஐபிக்கள் வர தொடங்கினர்.
அப்போது, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் துணை மேயராக பதவி வகித்த விளாடிமிர் புதினும் அங்கு வர தொடங்கினார். அப்படி, புதினுக்கும், பிரிகோஜினுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. ரஷ்ய அரசுடனான இணக்கத்தின் மூலம் தனியார் ராணுவ குழு ஒன்றை பிரிகோஜின் தொடங்கினார். ரஷ்யா அரசின் கேட்டரிங் ஒப்பந்தங்கள், இவரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவே, கடந்த பல ஆண்டுகளாக, எவ்ஜெனி பிரிகோஜின் 'புதினின் செஃப்' என அழைக்கப்படுகிறார். லிபியா, சிரியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் மாலி போன்ற நாடுகளில் வாக்னர் குழு ரஷ்யாவுக்கு துணையாக போரில் ஈடுபட்டது.
ரஷ்ய ராணுவம் செய்யமுடியாத சில சட்டவிரோத செயல்களை விளாடிமிர் புதின் இந்த குழு மூலம் நிறைவேற்றி வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக தான் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் இந்த வாக்னர் குழு ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியது. உக்ரைன் - ரஷ்யா போரின்போது வாக்னர் குழுவுக்கு ரஷ்யா வேண்டிய உதவிகளைச் செய்யாததால் வாக்னர் குழு அதிருப்தி அடைந்தது.
அதைத்தொடர்ந்து, ரஷ்யாவின் ராணுவ தலைமையை கவிழ்ப்பதாக அவர் உறுதியேற்று ஜூன் மாதம் ரஷ்ய அரசுக்கு எதிராக செயல்பட தொடங்கினார். 25 ஆயிரம் வீரர்களைக் கொண்ட வாக்னர் படையினர், சாவுக்கு அஞ்சாமல் போரிடும் பயிற்சி பெற்றவர்கள். அவர்கள் ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பெலாரஸ் அதிபரின் பேச்சுவார்த்தையால் அமைதி ஏற்பட்டது.
இந்நிலையில் தான், ரஷ்யாவின் ட்வெர் பகுதியில் பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், அதில் 10 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. இறந்த பயணிகளில் வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினும் ஒருவர் என்று ரஷ்ய விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி பயணித்த போது இந்த விமான விபத்து நடந்துள்ளது.
எவ்ஜெனி பிரிகோஜின் இறந்துவிட்டதாக அவரது வாக்னர் கூலிப்படை குழுவுடன் இணைந்த டெலிகிராம் சேனலும் செய்தி வெளியிட்டுள்ளது. வாக்னர் குழுமத்தின் தலைவர், ரஷ்யாவின் ஹீரோ, உண்மையான தேசபக்தர் யெவ்ஜெனி விக்டோரோவிச் பிரிகோஜின் துரோகிகளின் செயல்களின் விளைவாக இறந்தார் என அந்த சேனல் பதிவிட்டுள்ளது.
இதனால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வாக்னர் படை தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்திருப்பதன் பின்னால் ரஷ்யா அரசின் சதி இருக்கக் கூடும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருவதால் ரஷ்யாவில் மீண்டும் உள்நாட்டுப் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Post a Comment
0 Comments