Type Here to Get Search Results !

#LiveTamilTV

தமிழீழ எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் கொரோனா தொற்றினால் மறைவு!

தமிழீழ எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் மறைவு!
தாயக கனவுடன் சாவினை தழுவிய பாடல் உட்பட பல தாயக பாடல்களை பாடி தன் குரலால் எம்மின விடுதலைக்கு அளப்பெரும் பணியாற்றிய இசைக் கலைஞர்.
நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான 'மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி' என்ற பாடல் உட்பட தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை கனடாவில் சாவடைந்துள்ளார். கொரோனா தொற்றினால் ரொறோன்ரோ மருத்துமனையில் சிகிற்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார்.
சிறுவயதிலேயே வாய்ப்பாட்டு, பண்ணிசை, வீணை, வயலின் எனும் கலைகளைத் தமது தந்தையாரான 'கலாபூஷணம்' 'சங்கீதரத்தினம்' வர்ணகுலசிங்கம் அவர்களைக் குருவாக் கொண்டு கற்கத் தொடங்கியவர். பின்னர் மிருதங்கம், பியானோ ஆகிய வாத்தியக் கருவிகளையும் முறையாகக் கற்றுக் தேறிய பெருமைக்குரியவர்.

வடஇலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட வாய்பாட்டு, மிருதங்கம் ஆகியவற்றுக்கான பரீட்சைகளில் ஆசிரிய தரம் வரை கற்றுத்தேறி சங்கீத, மிருதங்க கலாவித்தகர் என்ற பட்டம் பெற்ற பின்னர், யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுன்கலைக் கல்லூரியில் இசைக்கலாமணி பட்டம் பெற்று, அங்கு ஐந்து ஆண்டுகள் இசை விரிவுரையாளராகவும் பணியாற்றிவர்.
இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேவைகளின் நிகழ்ச்சிகளில் இசைக்கலைஞராக இருந்து பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றிருந்தார்.
இலங்கை இந்து கலாசார அமைச்சினால் இசை நடன ஆசிரியர்களுக்கு என நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறைகளை தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசை மேற்படிப்பை மேற்கொண்ட வர்ண ராமேஸ்வரன், தமிழகத்தின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான திருவாரூர் பக்தவத்சலம் அவர்களிடம் மிருதங்கத்தையும் இசை மேசை ரி.எம். தியாகராஜன் , கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, ரி.வி கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் இசை நுணுக்கங்களையும் கற்றுத்தேறி, தமிழ்நாட்டில் பல இசைக்கச்சோிகளையும் நடத்திப் பலரதும் பாராட்டைப் பெற்றவர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து பல போராட்டத்திற்கா விடுதலைப் பாடல்களைப் பாடியிருக்கின்றார். அதில் மாவீரர் நாளில் மட்டும் ஒலிப்பரப்பாகும் பாடலான மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி என்ற பாடல் வர்ண ராமேஸ்வரானால் பாடப்பட்டது. அத்துடன் பல மாவீரர்கள் நினைவுப் பாடல்கள், போராட்ட வெற்றிச் சமர் பாடல்கள், நல்லை முருகள் பாடல்கள் என அவரால் பாடப்பட்ட பாடல்கள் பல எம்முன்னே இருக்கின்றன.
1997 ஆம் ஆண்டு தமிழர்களின் போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் புறநானூறு பாடல்கள் பலவற்றை நவீன இசையில் இசையமைத்து (இவருடன் வேறு நபர்களையும் இணைந்து) இசைநாடகமாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரகாரன் அவர்கள் முன் அரங்கேற்றி பாராட்டைப் பெற்றிருந்தார். இதில் அன்று இம்ரான் - பாண்டியன் படையணியின் போராளிகள் குறித்த இசை நாடகத்தில் பாடல்களைப் பாடி நடித்திருந்தார்கள்.
கனடாவுக்குப் ரொறன்ரோவுக்குப் புலம் பெயர்ந்த வர்ண ராமேஸ்வரன் அவர்கள் மிருதங்க, நடன அரங்கேற்றங்களுக்கு முன்னணிப் பாடகராக விளங்கினார். வர்ணம் இசைக் கல்லூரியை அவர் அங்கு உருவாக்கி பல நகரங்களில் இசை வகுப்புக்களை நடாத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வர்ணம் ஒன்லைன் இணைய இசைக்கல்லூரியை உருவாக்கி அதனை நிர்வகித்து வந்திருந்தார்.

அத்துடன் கனடாவில் தாயப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் தாய் அமைப்புடன் இணைந்து அன்றைய காலகட்டத்தில் நடத்தப்பட்ட பல போராட்டங்களுக்கான பல பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளார் என்பது இங்க நினைவூட்டத்தக்கது. (Pathivu Inayam)


நன்றி: பைரவி நுண்கலைக் கூடம்(Bhairavi Music Academy)

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big