'தென்னாப்ரிக்க பெண்ணுக்கு 10 குழந்தைகள் பிறக்கவில்லை' - அம்பலமான பொய் செய்தி.
தென் ஆப்ரிக்காவில் கோசியாமி தமரா சித்தோல் என்ற பெண் ஒருவர் பத்து குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தியில் உண்மை இல்லை என அதிகாரப்பூர்வ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குவாடெங் என்னும் அந்த மாகாணத்தில் எந்த மருத்துவமனையிலும் 10 குழந்தைகள் பிறக்கவில்லை என மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிதோல் சமீபத்தில் கர்ப்பமாகவும் இல்லை என்றும் மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.
சிதோலுக்கு 37 வயது. அவரின் மன நலம் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கதை எவ்வாறு உருவானது, எதனால் அவ்வாறு கூறப்பட்டது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
`இண்டிபெண்டண்ட் ஆன்லைன்` ஊடக குழுமத்திற்கு சொந்தமான ப்ரிடோரியா நியூஸ் செய்தி தளம்தான் இந்த செய்தியை முதன்முறையாக வெளியிட்டது. விசாரணைக்கு பிறகும் தங்களின் செய்தி வழங்கலில் உறுதியாக இருப்பதாக தற்போது `இண்டிபெண்டண்ட் ஆன்லைன்` குழுமம் தெரிவித்துள்ளது.
மேலும் தென் ஆப்ரிக்காவின் தலைநகர் ப்ரிடோரியாவில் உள்ள, ஸ்டீவ் பிகோ அகாதமி மருத்துவமனையில் சிதோல் ஜூன் 7ஆம் தேதியன்று குழந்தைகளை பிரசவித்தார். ஆனால் அந்த மருத்துவமனை ஊழியர்கள் அதற்கு தயாராக இருக்கவில்லை என செய்தி குழுமம் மேலும் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை மற்றும் மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்பதை மறைக்க முயற்சி செய்கின்றனர் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
"இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை. ஆதாரங்கள் அற்றவை. ஸ்டீவ் பிகோ அகாதமி மருத்துவமனை மற்றும் குவாடெங் மாகாண நிர்வாகத்தின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் முயற்சி இது" என அதற்கு மறுப்பு தெரிவிக்கும் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
ப்ரிடோரியா நியூஸின் ஆசிரியர் ராம்பேடி மற்றும் இண்டிபெண்டண்ட் ஆன்லைன் ஆகியவற்றின் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த கதை எப்படி உருவானது?
தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகருக்கு அருகில் உள்ள குவாடெங் மாகாணத்தில் உழைக்கும் மக்கள் அதிகமாக வசிக்கும் தெம்பிசா நகரத்தில் சிதோல் மற்றும் அவரின் கணவர் டெபோஹோ சோடெட்சி வசிக்கின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே 6 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் ராம்பேடி செல்லும் தேவையாலத்திற்கு வழக்கமாக செல்லும்போது டிசம்பர் மாதம் அவருக்கு அறிமுகமாகினர். மே மாதம் இந்த தம்பதியினரை அவர் நேர்காணல் செய்தபோது அவர்கள் தங்களுக்கு எட்டு குழந்தைகள் பிறக்கவிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிதோலின் புகைப்படத்தில் அவரின் வயிறு வழக்கத்திற்கு மாறாக பெரியதாக காட்சியளிக்கிறது.
பத்து குழந்தைகள் பிறந்துள்ளதாக சோடெட்சி கூறியதாக இந்த செய்தியை பரிட்டோரியா நியூஸ் ஜூன் 8ஆம் தேதியன்று வெளியிட்டது. அதன்பின் குழந்தைகள் பிறந்த செய்தியை தனக்கு குறுஞ்செய்தி மூலம் தனது மனைவி தெரியப்படுத்தியதாகவும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தான் மருத்துவமனைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் சோடெட்சி தெரிவித்திருந்தார்.
ராம்பேடி வாட்சப் செய்திகளையே நம்பியிருந்தார். அவரால் சுயாதீனமாக இந்த செய்தியை உறுதி செய்ய முடியவில்லை. மேலும் மருத்துவமனையிடமிருந்தும் இந்த செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.
அதன்பின் உள்ளூர் மேயர் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். அதன்பிறகுதான் பிபிசி உட்பட பிற செய்தி தளங்கள் இந்த செய்தியைப் பிரசுரித்தன. அதன்பின் அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர் உள்ளூர் மேயர், குடும்பம் தெரிவித்த செய்தியைத்தான் தெரிவித்தார் என்றும், அவரும் குழந்தைகளைப் பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.
10 குழந்தை பெற்றதாக கூறும் தம்பதியினருக்கும் அந்த குழந்தைகளுக்கும் நன்கொடைகள் குவிந்தன. ஆனால் அந்த குழந்தைகள் எந்த மருத்துவமனையில் பிறந்தன என்று ப்ரிடோரியா நியூஸ் தெரிவிக்காததால் குவாங்டென் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் தங்கள் இடத்தில் குழந்தைகள் பிறக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு வந்த பிறகு சந்தேகம் உருவானது.
இந்த செய்தி வந்து பத்து நாட்களுக்குப் பிறகு இண்டிபெண்டண்ட் ஆன்லைன், மருத்துவனை மீது குற்றஞ்சாட்டியது. அதன்பிறகு ஒரு வாரம் கழித்து சோடெட்சி தனது மனைவியை காணவில்லை என்றும், நன்கொடைகள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.
அதே சமயம் குழந்தைகள் மூலம் சோடெட்சி பணம் பெற முயல்கிறார் என சிதோல் குற்றஞ்சாட்டுவதாக ப்ரிடோரியா நியூஸ் செய்தி வெளியிட்டது.
இதற்கிடையில் சமூக ஆர்வலர்கள் சிதோலை கண்டுபிடித்து சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர் என குவாங்டென் மாகாண அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ராம்பேடிக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை கடித்தத்தில் அவர் இண்டிபெண்டண்ட் ஆன்லைன் குழுமத்தின் பெயர் கெடும்படி நடந்து கொண்ட காரணத்திற்காக மன்னிப்பு கோரியதாக நியூஸ் 24 செய்தி தளம் குறிப்பிட்டுள்ளது. மேலும் அவர் அதை ஒரு புலனாய்வு செய்தியை போல பாவித்து இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: BBCTamil
Post a Comment
0 Comments