தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று(07) ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆட்சி அமைக்க அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உரிமை கோரினார்.
இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான விழாவில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரபிரமாணம் செய்து வைத்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார். "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என்று தனது பெயரை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்து வைத்தார்.
ஸ்டாலினை தொடர்ந்து திமுக சார்பாக 33 அமைச்சர்கள் வரிசையாக பதவி ஏற்றுக்கொண்டனர். நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வரிசையாக ஒவ்வொரு அமைச்சர்களாக பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த விழா பெரிய அளவில் ஆடம்பரம் இல்லாமல் நடந்தது. குறைந்த அளவிலேயே விருந்தினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் திமுக எம்எல்ஏக்கள், கூட்டணி தலைவர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், ஸ்டாலினின் குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
கொரோனா காரணமாக சமூக இடைவெளவிடப்பட்டு, எல்லோரும் மாஸ்க் அணிந்து முறையாக விழா நடைபெற்றது. திமுக தவிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
Post a Comment
0 Comments