மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டோர் குறித்த கொள்கை உருவாக்கதை வலியுறுத்தியும் பாதிக்கப்பட்டோர் சார்பாக தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 


DATA தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அக்கோரிக்கையை விடுத்துள்ளனர். 
இந்த சந்திப்பில் DATA அமைப்பின் இயக்குனர் திரு. க. ஜீவராசா,
மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் சம்மேளன தலைவர் திரு  து. அரிதாஸ் ,சம்மேளன ஆலோசகர் திரு. சோ. புவிராசசிங்கம் , DATA இயக்குனர்  திரு. ச. அருள்மொழி ஆகியோர்  கலந்து கொண்டார்.

குறித்த ஊடக சந்திப்பில் , மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டோர் குறித்த கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ஓர் விழிப்புணர்வு செயற்பாட்டை முன்னெடுக்கப்போவதாக மாற்றுத்திறனாளிகள்  தெரிவித்தனர்.

அத்துடன்  மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில், பாதிக்கப்பட்டோர் சார்பாக மலரும் புத்தாண்டில் பின்வரும் மூன்று கோரிக்கைகளை இந்த ஆண்டில் நிறைவேற்றித் தருமாறு அன்போடு வேண்டுகின்றோம்.

1. மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம்.
2. மாதம் தோறும் பெரிதும் பாதிக்கப்பட்டோருக்கு ரூபா10,000 நிதியுதவி.
3. பாதிக்கப்பட்டோர் அமைப்புக்களுக்கு இயங்குவதற்கான உதவிகள்.

அத்தோடு போரின் பின்னரான காலத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்தான கொள்கை உருவாக்கத்தையும் கோருகின்றோம்.

போர் ஓய்ந்து 12 வருடங்களை கடக்கின்றோம். போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றைய மாகாணங்களிலும் பார்க்க அதிகம்.

பாதிக்கப்பட்டோரின் வாழ்வில் அவர்களின் வலியை ஆற்றுவதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதற்கும் இலங்கை அரசும், மாகாண அரசுகளும், தொண்டு நிறுவனங்களும், உறவுகளும் ஆற்றிவரும் சேவைகளை நாம் நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.

இருந்த போதும் எமது தேவைகளில் பல இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது என்பதை நாம் எமது உறவுகளின் முன் சொல்ல வேண்டியுள்ளதால் இன்று இந்த அறிக்கையை வெளியிடுகின்றோம்.

1.மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம்
மாற்றுத்திறனாளிகள் தங்குவதற்கான வசதிகளுடன் கூடிய காப்பகங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும் என்பது எமது நீண்டகால தேவையாக உள்ளது. இன்னொருவரில் முழுமையாக தங்கி வாழ்பவர்கள் பல சந்தர்ப்பங்களில் தமக்கான ஒரு காப்பகங்கள் இல்லை என்று ஏங்குகின்றார்கள். அவ்வாறான காப்பகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும் என கோருகின்றோம்.

2.மாதம் தோறும் பெரிதும் பாதிக்கப்பட்டோருக்கு ரூபா10,000 நிதியுதவி.
இன்னொருவரில் பெரிதும் தங்கி வாழ்பவர்களுக்கு குறைந்த பட்சம் ரூபா 10,000 மாதாந்த உதவித் தொகையாக கொடுக்கப்பட வேண்டுமென்று கோருகின்றோம்.
உதாரணமாக,

1. முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள்

2. இரண்டு கரங்களையும் இழந்தவர்கள்

3. பல அங்கங்களை இழந்தவர்கள்

4. இரண்டு கண்களையும் இழந்தவர்கள்

5. இரண்டு கால்களையும் முற்றாக இழந்தவர்கள்

6. முதுமையில் அநாதைகள் ஆக்கப்பட்டவர்கள்

3.பாதிக்கப்பட்டோர் அமைப்புக்களுக்கு இயங்குவதற்கான உதவிகள்
கிராமங்களை மையப்படுத்தி இயங்கி வரும் பாதிக்கப்பட்டோர் அமைப்புகளுக்கு, அவை தொடர்ச்சியாக இயங்குவதற்கு பல்வேறு உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.

சுயமதிப்பீட்டுமாநாடு
பாதிக்கப்பட்டோரும் அவர்களோடு பயணிப்போரும் இணைந்து யாழ்ப்பாணத்தில் 2019ம் ஆண்டு ஓர் சுய மதிப்பீட்டு மாநாட்டை நடாத்தினோம். இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பல அமைப்புக்களும், சமூக சேவை திணைக்களங்கள், அரச அதிபர்கள், அவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அதில் பாதிக்கப்பட்டவர்களை நான்கு பிரிவினர்களாக வகுத்து அந்த மாநாட்டை நடாத்தினோம்.

1. மாற்றுத்திறனாளிகள்
2. பெற்றோரை இழந்த பிள்ளைகள்
3. பிள்ளைகளை இழந்த பெற்றோர் (முதியவர்கள்)
4. பெண்தலைமை குடும்பங்கள்
அந்த மாநாட்டில் நாம் எமது கோரிக்கைகளை வகைப்படுத்தி பிரகடணங்களாக வெளிப்படுத்தி இருந்தோம்.

அந்த கோரிக்கைகளில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய கோரிக்கைகளை இந்த வருடத்திலேயே நிறைவேற்றி தருமாறு நாம் கோரி நிற்கின்றோம்.

இந்த கோரிக்கைகளை மக்களிடமும், அரச தரப்பினரிடமும் எடுத்துச் செல்ல அனைவரும் உதவ வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.