உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அன்புச்சகோதரர் விவேக் அவர்கள் மறைந்தார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்.
குணமாகி வந்துவிடுவார் என நாமெல்லாம் எதிர்பார்த்து இருந்த சூழலில் அவரது மரணச்செய்தி இடியென நம் இதயத்தில் இறங்கி இருக்கிறது.தனிப்பட்ட அளவில் என் மீது பேரன்பு கொண்ட அவரது மரணம் தாங்க முடியாத துயரில் என்னை ஆழ்த்தி இருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நடிப்பு என்பது ஒரு கலை, தொழில் என்பதையெல்லாம் தாண்டி இந்த மண்ணையும், மக்களையும் நேசித்துச் சேவை செய்வதற்கான வழி என்பதை உணர்ந்து வாழ்ந்தவர் சகோதரர் விவேக் அவர்கள். இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் பட்டறையிலிருந்து ஒளிவீசக்கூடிய வைரமாய் வெளிப்பட்டுத் தன் அசாத்திய நடிப்பாற்றலால் பல திரைப்படங்களை வெற்றிப் பெறச்செய்து தமிழ்த்திரையுலகத்தைத் தழைக்கச் செய்த சகோதரர் விவேக் அவர்கள் மதிப்பிற்குரிய ஐயா அப்துல் கலாம் அவர்களது வழியில் நின்று நமது தாய் மண் செழிக்க, பல இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு தனது சமூக எண்ணத்தால் அனைவருக்கும் உதாரணமாக மாறி வாழ்ந்தவர்.
பேராற்றல் கொண்ட பெரும் கலைஞர் விவேக் அவர்கள், மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளைப் போக்குவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகளை நகைச்சுவைக் காட்சிகளாக உருவாக்கி தான் நடித்த திரைப்படங்களில் எல்லாம் அவற்றைப் பயன்படுத்தித் திரைப்படம் பார்க்கின்ற பல கோடி தமிழர்களைச் சிந்திக்க வைத்து சீர்திருத்திய மகத்தான மனிதராகத் திகழ்ந்தார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர். ராதா எனத் தனது நடிப்பாற்றல் மூலம் மக்களிடையே சீர்திருத்த கருத்துக்களைப் பரப்பிய பெரும் கலைஞர்களின் சமகாலத் தொடர்ச்சியாக விளங்கிய மாபெரும் கலைஞராக விவேக் அவர்கள் பல நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் தனது பகுத்தறிவுக்கருத்துகள் மூலம் முத்திரை பதித்தவராவார்.
தான் மரணிக்கும் நாளுக்கு முதல்நாள் வரை கொரோனா குறித்த விழிப்புணர்வுப் பரப்புரையில் ஈடுபட்டு மக்கள் சேவை புரிந்து வந்த மாமனிதர் விவேக் அவர்களின் திடீர் மரணச்செய்தி ஒட்டுமொத்த மக்களையும் பெரிதும் கலக்கமடையச் செய்கிறது. கொரானா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாளே நிகழ்ந்த அவரது மரணம் , தடுப்பூசி குறித்து மக்களிடையே பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு இது குறித்துக் கவனம் செலுத்தி தடுப்பூசி குறித்தும், அன்புச்சகோதரர் விவேக் அவர்களது மரணம் குறித்தும் மக்களிடையே நிலவும் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களுக்குத் தெளிவான விடை அளிக்க வேண்டுமென இச்சமயத்தில் வலியுறுத்துகிறேன்.
இந்த மண்ணின் மகத்தான கலைஞன், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நம்மைச் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்து சீர்திருத்திய, 'சின்னக் கலைவாணர்' என அன்போடு அழைக்கப்பட்ட அன்புச்சகோதரர் நடிகர் விவேக் அவர்களது எதிர்பாராத மரணம் தமிழ்ச்சமூகத்திற்கும், தமிழ் திரை உலகிற்கும் ஏற்பட்டிருக்கிற ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. கலைச்சேவையும், மக்கள் சேவையும் புரிந்து மண்ணின் மகத்தான பெரும் கலைஞராக விளங்கிய அன்புச் சகோதரர் விவேக் அவர்கள், பல உயரிய விருதுகளைப் பெற்று , உச்சங்களைத் தொட்டுப் பெற்ற உயரங்களுக்குப் பெருமை சேர்த்தவராவார்.
எனது பேரன்பிற்குரிய சகோதரர் தமிழ் திரை உலகின் மகத்தானக் கலைஞர் விவேக் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், உலகெங்குமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
கலை உலகின் பேராற்றல்மிக்கப் பெரும் கலைஞர், நம் மண்ணையும், மக்களையும் பற்றிச் சிந்தித்து அதற்காக உழைத்து இயங்கிய தனிமனித இயக்கம் அன்புச்சகோதரர் விவேக் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment
0 Comments