நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதற்காக 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களை அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்வு செய்துள்ளார்.
இந்நிலையில், 234 வேட்பாளர்களையும் சென்னை YMCA மைதானத்தில் ஒரே மேடையில் சீமான் இன்று அறிமுகம் செய்து வைத்தார். பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் 117 பெண் வேட்பாளர்களும், 117 ஆண் வேட்பாளர்கள் என மொத்தம் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்தார்.
முன்னதாக, சீமான் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி, வரும் சட்ட மன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் தான் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்தார்.
சமீபத்தில், 'திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவருக்கு எதிராக போட்டியிடுவேன்' என்று சீமான் சவால் விடுத்திருந்த நிலையில், தற்போது திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதுபோல கன்னியாகுமரி மக்களவை இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அனிட்டர் ஆல்வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான், 12,497 வாக்குகளை மட்டும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0 Comments