Type Here to Get Search Results !

Live

-----------------------------------------------------------------
WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 ***************************************** ***********************************************

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை! எழுச்சிப் போராட்டம் – வெளியான இறுதிப்பிரகடனம்!!!

நாங்கள் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக எமது சுயநிர்ணய உரிமைகளுக்காகப் போராடி வருகின்றோம். 

தமிழராகிய நாங்கள் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைந்த நிலப்பரப்பைத் தாயகமாகக் கொண்ட ஒரு தேசிய இனம். எங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் சகல உரிமையும் எமக்கு உள்ளது. 

எமது இந்தப்பிறப்புரிமையைத் தொடர்ச்சியாக மறுதலித்து எம்மை அடக்கி ஆள்வதற்கே இலங்கை தேசம் விளைகின்றது என வடக்கு-கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இன்றையதினம் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

இலங்கை பேரினவாத அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கைத்தீவு பிரித்தானியாவின் காலனித்துவத்திலிருந்து விடுதலை அடைந்த காலம் முதல், ஈழத் தமிழர்களாகிய நாங்கள் எமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி சாத்வீக முறை போராட்டங்களை மேற்கொண்டு வந்தோம்.

இப்போராட்டங்கள் வன்முறையினூடாக அடக்கப்பட்டதினால், ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம்.

தமிழ் மக்களின் தேசிய ஆயுதப் போராட்டம் இலங்கை பேரினவாத அரசினால் கொடுங்கரம் கொண்டு மிகப்பெரும் மனிதப் பேரழிப்பினூடாக முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது.

இந்த இறுதி யுத்தத்தின்போது இறுதி ஆறு மாதங்களில் மட்டும் எழுபதினாயிரத்துக்கு (70,000) மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டதை ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக் குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

2017ஆம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக் கருத்திட்டமானது(ITJP), தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” கையாளப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட “பாலியல் வன்முறை முகாங்கள்” பற்றிய விபரங்களை ஐ.நா விடம் கையளித்தது.

ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் 2013 சித்திரை மாதத்திற்குரிய அறிக்கைக்கு அமைவாக, தமிழர் தாயகத்தில் 90,000 க்கும் மேற்பட்ட யுத்த மூல விதவைகள் உள்ளனர்.

இவ்வாறு நீண்ட நெடிய காலமாக இனவழிப்புக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் எமதினதிற்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது.

யுத்தம் நிறைவடைந்து கடந்த பதினொரு ஆண்டுகளில் வடக்கு, கிழக்கை இராணுவ மயமாக்கிவரும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு, கிழக்கு பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி, தமிழ்த் தேசியத்தைச் சிதைவடையச் செய்து, அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காகப் பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், நிலவள திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக பௌத்த மயமாக்கல், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை இலங்கை அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது.

வடக்கு, கிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் ஆலயங்களைக் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறன. அத்துடன் தமிழர் தாயகம் எங்கிலும் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டும், தொடர்ந்தும் அமைக்கப்படுவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான நில அபகரிப்புகளும், பெளத்தசிங்கள மயமாக்கல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தமிழர் தாயகம் எங்கும் நிலைகொண்டிருக்கும் சிங்கள இராணுவம் உடனடியாக அகற்றப்படுவதுடன், இயல்பு நிலை ஏற்படுத்தப்படவேண்டும்.

சிவில் நிர்வாகங்களில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுத்தல் உடனடியாக நிறுத்தப்படுவதுடன் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் உடனடியாக மாற்றப்படவேண்டும்.

மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும், அதற்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இது அவர்களின் பேச்சுரிமை, நடமாடும் சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும்.

அத்துடன் தமிழர் தரப்பில் உருவாகும் விடுதலைக்கான தன்னெழுச்சியான அரசியல் வெளியினை ஒடுக்குவதில் சிங்கள பெளத்த பேரினவாத அரசு குறியாகவே உள்ளது.

இவ்வாறான அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தும், பூர்வீக வாழ்விடங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைக் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றம் ஒன்றை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பில் உள்ள தமிழ்ப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் பால் தரும் பசுக்களைத் திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யும் நடவடிக்கைகளும் நடந்தேறி வருகின்றன. இதன் ஒரு கட்டமாகத் தமிழ்ப் பூர்வீக நிலங்களில் வனங்கள் அழிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான தமிழரின் வாழ்வாதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகள் உடனடியாக மீளக் கையளிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையைத் தொடர்ச்சியாக மறுதலித்து வரும் இந்தச்சிங்கள பெளத்த அரசானது, தமிழர்களின் நினைவுத்தூபிகள், அடையாளங்களை அழிப்பதில் முனைப்பாகச் செயல்படுகின்றது. இந்நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் பலரையும் கைது செய்து பலவருடங்களாகத் தடுத்து வைத்துள்ளனர். இஸ்லாமியச் சகோதரர்களையும் இதேபயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பயன்படுத்தி தற்போது தடுத்து வைக்கத்தொடங்கியுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுவதுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் யுத்த மற்றும் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.

பல வருடங்களாகத் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உடனடியாக நீதி வழங்கப்படவேண்டும்.தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட முறையில் நடைபெறும் சிங்கள அதிகாரிகளின் நியமனங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இஸ்லாமிய மக்களின் மத ரீதியான பாரம்பரிய சமய சடங்கான ஜனாசாக்களைப் புதைக்கும் செயற்பாடுகளை இல்லாமல் செய்து ஜனாசாக்களை இச்சிங்கள பெளத்த பேரினவாத அரசு எரியூட்டி வருகின்றது. இதற்கு எதிராகப் போராடும் முஸ்லீம் சமூகத்தையும் அடக்கி ஆள முனைகின்றனர்.

இந்நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டு இஸ்லாமிய மக்களின் அடிப்படை மத உரிமை மதிக்கப்பட வேண்டும்.அத்துடன் மலையக தமிழ் மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக 1000 ரூபாய் சம்பள உயர்வு கேட்டுப் போராடி வருகின்றனர்.

அவர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதுடன் அவர்கள் எதிர் நோக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும்.

மேற்தரப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவேண்டும் என்பதினை வலியுறுத்தி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு-கிழக்கு சிவில் அமைப்புகளும், தமிழ் பேசும் மக்களும் முன்னெடுத்த தன்னெழுச்சிப் போராட்டம் வலியுறுத்தி நிற்கின்றது.

அத்துடன் ஈழத் தமிழராகிய நாங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு”சிறிலங்காவை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா. பொதுச்சபை, ஐ. நா.பாதுகாப்புச்சபை போன்றவை எடுக்க வேண்டுமென்று இப்புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்” என்ற கோரிக்கையினை அனுப்பி வைத்திருந்தோம்.

அதற்குப் பிற்பாடு ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரும் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் ஆலோசனையை முன்மொழிந்துள்ளதைவரவேற்பதோடு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு வலியுறுத்திக் கோருகின்றோம்.

மேலும், தமிழ்மக்கள்மீது புரியப்பட்ட இனப்படுகொலை மீண்டும் நிகழாதிருப்பதுக்கான உத்தரவாதமாக, தமிழ்மக்கள் தமக்கான நிரந்தர அரசியல் தீர்வைவெளிப்படுத்துவதற்கான சர்வதேசத்தினால் நடாத்திக் கண்காணிக்கப்படும் பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

மேற்படி விடயங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கு பொருத்தமான முறையில் கொண்டுபோய்ச் சேர்ப்போம்.சிங்கள தேசத்தில் மாறி மாறி ஆட்சியில் அமரும் அரசுகள் ஒருபோதும் எமக்கான உரிமைகளை அங்கீகரிக்கப் போவதில்லை என்ற பட்டறிவில் தான் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியையும் தமிழர் தேசத்துக்கான அங்கீகாரத்தையும் வேண்டி நாம் போராடிவருகின்றோம்.

எமது நீதிக்கான போராட்டத்தினை உலகம் ஏற்கும் திசையை நோக்கி மிகத்தீவிரமாகப் போராட்ட அரசியலைத் தமிழ் மக்களாகிய நாம் அணிதிரண்டு நகர்த்த வேண்டுமென்ற திடசங்கற்பத்துடன் போராட்டங்களுக்கு அனைவரும் வீரியமாக ஒருங்கிணைந்த செயல்வடிவம் கொடுக்க வேண்டுமென பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி போராட்டம் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.














Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big