விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர்.
தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்தில், நடுசூரங்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ் (48), அவரது மனைவி செல்வி (40) ஆகியோரும் உயிரிழந்தனர்.
இவர்கள் இருவரும் பட்டாசு தொழிற்சாலையில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த நிலையில், நேற்று முன் தினம் காலை வழக்கம் போல் இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர்.
இருவரும் தனித்தனி அறைகளில் வேலை செய்தனர். முதலில் வெடி விபத்து ஏற்பட்ட அறையில் தான் செல்வி பணியாற்றியுள்ளார்.
வெடி வெடித்தவுடன் தனது மனைவி குறித்து பதற்றமடைந்த பாக்கியராஜ், மனைவி பணியாற்றிய அறைக்கு ஓடியுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் இருந்த மற்றொரு அறை பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாக்கியராஜ், காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனிடையே செல்வியும் உடல் கருகி உயிருக்கு போராடினார்.
இதையடுத்து பாக்கியராஜ் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட போது, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு நந்தினி என்று பெயர் வைத்துள்ளனர்.
நந்தினி புதுசூரங்குடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளயில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், தாய் தந்தை உயிரிழந்ததை கேள்விப்பட்ட சிறுமி அங்கு கதறி அழுத காட்சிகள் அங்கிருந்தோரை கண்கலங்க செய்தது. அவரது உறவினர்கள் எவ்வளவோ தேற்ற முயற்சித்தும் சிறுமி கதறுவதை நிறுத்தவே இல்லை.
காலையில் வேலைக்கு சென்ற அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வரவேயில்லை என அந்த சிறுமி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment
0 Comments