தமிழ் திரை உலகமும் அரசியலும் பல நடிகர்களையும் தலைவர்களையும் கண்டிருந்தாலும், சிலரால் மட்டுமே மக்கள் மனங்களில் நீங்காத இடங்களைப் பெற முடிகின்றது. அப்படிப்பட்டவர்களில் கண்டிப்பாக விஜயகாந்துக்கு ஒரு தனி இடம் உள்ளது.
கடந்த சுமார் பத்து ஆண்டுகளாக எந்த வித பெரிய படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், தமிழ் திரை உலகின் புகழ்பெற்ற நடிகரான விஜயகாந்துக்கு, அவர் ரசிகர்களின் மத்தியில் இருக்கும் அன்பும், பாசமும், மரியாதையும் இன்னும் மாறவில்லை.
கோலிவுட்டின் புகழ்பெற்ற அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக விளங்கிய விஜயகாந்த் (Vijayakanth) அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மற்றவர்களுக்கு உதவும் அவரது குணமும், மக்கள் மீது அவர் கொண்டுள்ள பாசமும்தான் அரசியலிலும் அவர் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
கடந்த சில ஆண்டுகளில், விஜயகாந்த் எதிர்கொண்டுள்ள உடல்நலப் பிரச்சினைகள் குறித்து ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்பிக்கையுடனும் பிரார்த்தனையுடனும் இருந்தனர். இப்போது வெளிவந்துள்ள அவரது சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்தால், அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
விஜயகாந்த் இன்று பல மாதங்களுக்குப் பிறகு தனது வீட்டை விட்டு வெளியே வந்து சென்னையில் தனது தேமுதிக கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்காக திறந்த வேனில் பயணம் செய்தார். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், முன்பு இருந்த அதே தோரணையுடனும் இருப்பது போலவே நேரில் கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்கள் தலைவரை முன்போல் உற்சாகத்துடன் கண்ட ரசிகர்களுக்கு அது ஒரு மெய் சிலிர்க்கும் நேரமாக இருந்தது.
பிரச்சாரத்தின் போது, புதிதாகப் பிறந்த ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும்படி அவரிடம் கேட்கப்பட்டது. தன் பெயரையும் தனது மனைவி பெயரையும் இணைத்து அவர் அக்குழந்தைக்கு விஜயலதா என்ற அழகான பெயரை சூட்டினார்.
நல்ல உடல் ஆரோக்கியத்தோடு விஜயகாந்த் பிரச்சாரத்தை துவக்கி விட்டார். இதைத் தொடர்ந்து, ஏற்கனவே கலங்கியிருக்கும் தமிழக தேர்தல் (TN Assembly Elections) குட்டை இன்னும் கலங்கியுள்ளது. விஜயகாந்திற்கென்று ஒரு குறிப்பிட்ட வாக்காளர் கூட்டம் உள்ளது. அவருக்கென்று ஒரு வாக்கு வங்கி உள்ளது. அவரது வருகையால் கூட்டணி கணக்கீடுகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
Social Plugin
Social Plugin